வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் 12.46 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,
அமைச்சர் காந்தி சோளிங்கருக்கு பொன்னை ஆற்றில் இருந்து தண்ணீர் கேட்டார் பார்க்கலாம் என சொன்னேன். ஆனால் அவர் மேடையில் பேசி உடைத்துவிட்டார். இப்ப மக்கள் கோவிச்சுக்குவாங்க என்ன பண்ணா, எதை செய்தாலும் ரகசியமாக செய்ய வேண்டும். உலகத்திலேயே கிராமபுரத்தில் இருக்கும் ஒரே பல்கலைகழகம் சேர்க்காடு திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகம் தான். ஒரு காலத்தில் மாநில பட்டியலில் இருந்த கல்வியை இந்திரா காந்தி எமர்ஜென்சி காலத்தில் மத்திய பொது பட்டியலுக்கு கொண்டு போயிட்டார். அதை தான் இப்ப திரும்ப கேட்கிறோம். இதை எதிர்ப்பதால்தான் நமக்கு நிதி ஒதுக்க மாட்டேங்குறாங்க.
நீங்க ஆட்சி நடத்துறீங்களா? சாதி கட்சி நடத்துறீங்களா?
மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை அடுத்து அதை ஆராய்வதற்காக 2017-ஆம் ஆண்டு பாஜக அரசு 17-பேர் கொண்ட குழுவை அமைத்தது. இதில் 3 பேர் அரசு அலுவலர்களாக இருக்க வேண்டும் என்பது விதி. மீதம் உள்ள 14 பேரில் 13 பேர் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். 13 பேரை நியமித்து விட்டார்கள் மீதம் ஒருவர் ஆள் கிடைக்காததால் இங்க விட்டுவிட்டு கனடாவில் இருந்து ஒரு உறுப்பினரை நியமிக்கிறார்கள். அவர் யார் என்றால் அகில இந்திய பிராமணர் சங்க தலைவர், யாருமே தமிழர் இல்லை, அனைவருமே பிராமணர்கள் நீங்க ஆட்சி நடத்துறீங்களா? சாதி நடத்துறீங்களா? இதை எதிர்த்து பேசுவதால்தான் நமக்கு நிதி கொடுக்க மாட்டேங்குறாங்க. இதனால்தான் கல்வியை மாநில உரிமைக்கு கேட்கிறோம். இது போன்ற சில்லுண்டி தனத்தையெல்லாம் நாங்கள் எத்தனையே முறை பார்த்துள்ளோம். நாம பட்ட கஷ்டத்தை நம்ம பசங்க படக்கூடாது என கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
மேடையில் துரைமுருகன் கலகல:
நான் பள்ளிகூடம் போகும்போது தினமும் ஒரு வாத்தியார் என்னை, ஏ லேட்டா வந்தேனு அடிப்பார். அன்னைக்கு ஒரு நாள் நா பள்ளிக்கு லேட்டா போன எங்கடா போனேனு கேட்டார், எங்க நிலத்துல மொச்சக்காய் விளைந்தது அதை எடுத்துனு போய் உங்க வீட்டுல கொடுத்துட்டு வந்ததேன் என்றேன். உடனே அந்த வாத்தியார் அப்படியா வேற என்ன இருக்கு உங்க நிலத்தில் என்றார் நான் கலக்கா இருக்குனு சொன்னா, அப்படியா நாளைக்கு அதை எடுத்துனு வானு சொன்னார். அன்னையில் இருந்து அவர் எனக்கு நெருக்கம் ஆகிட்டார். அப்பவே எனக்கு அரசியல் புத்தி என்றார். விழா முடிவில் மேடை போட்டவருக்கு நன்றி கூறிய அமைச்சர் துரைமுருகன், திடீரென "கல்யாணம் கச்சேரிக்கு சிறந்த முறையில் பந்தல் போட PG SOUND சர்வீஸ் என மைக்கில் பேசியவர். நா உனக்கு விளம்பரம் பண்ணிட்டே உனக்கு காசு இல்லை என பந்தல் போட்டவருக்கு சால்வை போட்டு கலகலப்பை ஏற்படுத்தினார்.