தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர் ஐபிஎஸ் வேலூர் காவல் சரகத்தில் இரண்டு நாள் ஆய்வுப்பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் முதல் நாளான இன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐஜி, வேலூர் சரக டிஐஜி மற்றும் வேலூர் சரகத்திற்குட்பட்ட 4 மாவட்ட எஸ்.பிக்களுடன் ஆலோசனை மேற்கொண்டு சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். அதன் தொடர்ச்சியாக நள்ளிரவு 12 மணிக்கு வேலூர் மாநகர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டை சோதனை சாவடியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், காவலர்கள் மேற்கொண்டு வரும் வாகன தணிக்கை மற்றும் சோதனை ஆகியவற்றை ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக சித்தூர் பேருந்து நிலையத்திலும் இரவு நேர வாகன தணிக்கையை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து வேலூர் கிரீன் சர்க்கல் பகுதியில் நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்களையும் அதில் உள்ள வசதிகளையும் ஆய்வு செய்து நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களிடம் தாங்கள் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.


 




அதனைத் தொடர்ந்து வேலூரின் முக்கிய பகுதியான மண்டி தெருவில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் முறையாக பணி செய்கிறார்களா என்று முக்கிய தெருக்களில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஈ பீட் செயலியை முழுமையாக பயன்படுத்துகிறார்களா என்றும் ஆய்வு செய்தார். அப்போது ஒரு சில காவலர்கள் ஈ பீட் செயலியை முழுமையாக பயன்படுத்த திணறியதை அறிந்தவர் ஈ பீட் செயலியை அனைத்து வகையான காவலர்களும் முழுமையாக கற்கும் வண்ணம் அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வடக்கு மண்டல ஐஜி கண்ணன், வேலூர் சரக டிஐஜி முனைவர் முத்துசாமி, வேலூர் எஸ் பி ராஜேஷ் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ADGP சங்கர் கூறுகையில், ‘4.0 கஞ்சா வேட்டையை பொறுத்தவரை கடந்த கஞ்சா வேட்டையில் பிடிக்க முடியாத குற்றவாளிகளை இந்த கஞ்சா வேட்டையின்போது பிடிக்க முயற்சி செய்து வருகிறோம். 1.0 கஞ்சா வேட்டையின் போது இருந்த கஞ்சா புழக்கமும், 4.0 கஞ்சா வேட்டையின் போது இருக்கக்கூடிய கஞ்சா புழக்கமும் வெகுவாக குறைந்துள்ளது.


 




 


ஒவ்வொரு கஞ்சா வேட்டையின் போதும் படிப்படியாக கஞ்சா விற்பனை, கடத்தலை குறைத்து வருகிறோம். இங்கு விற்பனையை தடுத்தாலும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்துவதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கடந்த கஞ்சா வேட்டைகளின் போது திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் சப்ளையர்களை கண்டறிந்து அவர்கள் மீது கவனம் செலுத்தி வருகிறோம் “என கூறினார்.


மேலும், Police Feedback system வரவேற்பை பெற்ற ஒன்று அதனை வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்த உள்ளோம். கூடிய விரைவில் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் police feedback system கொண்டுவரப்படும் எனக் கூறினார். காவல்துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை அனைத்து காவலர்களும், அதிகாரிகளும் அறிந்து இருக்க வேண்டும். இதன் மூலம் மேலும் சிறப்பாக பணி செய்ய முடியும். இதற்காக தொடர்ச்சியாக காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் கூறினார். வேலூர் மாநகரை பொறுத்த வரைக்கும் இரவு நேர ரோந்து பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என ஆய்வு செய்தோம். வேலூர் மாநகரில் அதிகப்படியான சிசிடிவிகள் பொருத்தப்பட்டுள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களிலும் அதிகப்படியான வாகன தணிக்கை இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரோந்து காவலர்களும் சிறப்பாக பணியை செய்து வருகிறார்கள் என்றும் கூறினார்.