மத்திய அரசின் தூய்மை பாரதம் திட்டத்தின் மூலம் தூய்மைப் பணிக்காக வழங்கப்படும் 'காயகல்ப விருது' வேலூர் கஸ்பா நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மாநில பொதுச் சுகாதாரத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தலைமை மருத்துவமனை, ஒரு பொது மருத்துவமனை, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் தேர்வு செய்யப்பட்டு அதன் மொத்த செயல்பாட்டிற்காக 'காயகல்ப' விருது வழங்கப்படுகிறது.
'காயகல்ப' விருதுக்கு மருத்துவமனை வளாகம் தூய்மை பராமரிப்பு, மருத்துவ கழிவுகள் மேலாண்மை, சிறந்த மருத்துவ சேவை, விழிப்புணர்வு பதாகைகள், பிரசவ அறைகள் பராமரிப்பு, மகளிர் பரிசோதனை பிரிவு, ஸ்கேன் பிரிவு, பராமரிப்பு போன்ற காரணிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றது .
2020-21 ஆம் நிதியாண்டில் சிறப்பாக செயல்படும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 2020-21-ம் ஆண்டில் தமிழக அளவில் சிறப்பான பராமரிப்புக்காக வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட கஸ்பா நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 'காயகல்ப்' விருதுடன் ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து , ABP நாடு செய்தி குழுமத்திடம் பேசிய கஸ்பா நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் , மருத்துவ அலுவுலர் ,சூர்யா சரவணன் கூறுகையில் "வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட கஸ்பா நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது , இந்த ஆரம்ப சுகாதர நிலயத்தையொட்டி , 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் .
கஸ்பா பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் , தினக்கூலி மற்றும் , வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாய் இருப்பதால் , கஸ்பா பகுதியை சார்ந்தவர்கள் பெரும்பாலும் இங்கு செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தையே நாடி வருகின்றனர் .
சுகாதார நிலையத்தில் இருக்கும் சேவைகள் குறித்து சொல்ல வேண்டும் என்றால், 24 மணிநேரமும் பிரசவம் பார்க்கப்படுகின்றது , புறநோயாளிகள் பிரிவில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகின்றது. இதன்படி 6 படுக்கை வசதிகள் கொண்ட கஸ்பா நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் , ஒரு மருத்துவர் , 4-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் பயிற்சி செவிலியர்கள், மருந்தாளுநர், உதவியாளர்கள் என மொத்தம் 15 பேருடன் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, தினசரி சராசரியாக 150 இல் இருந்து 200 -க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மேலும் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 20 பிரசவம் வரை பார்க்கப்படுகின்றது .
இதுதவிர மாலை நேரங்களில் , காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர்கள் , உள்ளிட்ட பாலி கிளினிக் நிபுணர்கள் , கஸ்பா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு , இந்த பகுதியில் இருக்கும் மக்கள் பயனடைவதற்காக இலவச மருத்துவம் வழங்கி வருகிறோம் .
சுகாதாரமான மருத்துவ வளாகம், நோயாளிகள் குறித்த ஆவணங்கள் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் சிறந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமாக கஸ்பா ஆரம்ப சுகாதார நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டு 'காயகல்ப்' விருது பெற்றுள்ளது. மேலும் இந்த நேரத்தில் மத்திய அரசின் உயரிய விருதை பெற சேவை மனப்பான்மையோடு பணியாற்றிய , கஸ்பா ஆரம்ப சுகாதார நிலையத்தின் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார் .