முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்கும் விவகாரத்தில் பாஜக நீதிமன்றம் சென்று தடையாணை பெறும் என்று நேற்று செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா பேட்டி அளித்த நிலையில் நேற்று இரவோடு இரவாக துரிதகதியில் கருணாநிதி சிலை அமைத்தனர் திமுகவினர்.


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை நிறுவுவதற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுகவின் சார்பில் சிலை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கிரிவலப்பாதை அண்ணா நுழைவு வாயிலின் அருக்கில் வைப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தது. இந்நிலையில்  கிரிவலம் பாதையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைக்க கூடாது என்று கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் கடந்த மாதம் 13- ஆம் தேதி சிலையை வைக்க தற்காலிக தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு சிலைவைப்தற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கலைஞரின் சிலை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை  மனு தாக்கல் செய்த கார்த்தி என்பவர் வாபஸ் பெற்றுக்கொண்டார். மேலும் கிரிவலப் பாதையில் சிலை அமைக்க எந்தவித தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.



இதனைத்தொடர்ந்து நேற்று திருவண்ணாமலையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா அவர்கள் கருணாநிதி நாத்திக்கவாதி ஆன்மீகத்தைக்கொண்ட கிரிவல பாதையில்  கலைஞரின் சிலை  அமைக்கக்கூடாது எனவும் மீண்டும் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்த நிலையில்,  இதனை அறிந்த திமுக கட்சியினர் நேற்று திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு திரும்பி வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எவ.வேலு சிலை அமைப்பது குறித்து கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், மேலும் சிலையை நள்ளிரவு இரவோடு இரவாக அந்த இடத்தில் பீடமும் மற்றும் பீடத்தின் மேல்  முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையையும் துரிதகதியில் திமுகவினரால் அமைக்கப்பட்டது. இதனையடுத்து சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



கலைநயமிக்க பீடத்தோடு சேர்த்து கருணாநிதியின் சிலை 30 அடி உயரத்திற்கு அமைந்துள்ளது. கலைஞரின் சிலை அமைக்கப்பட்ட இடத்தில் இன்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டும் மேலும் அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் முன்னாள் நகர்மன்ற தலைவர் இரா. ஸ்ரீதரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். கருணாநிதியின் சிலையையும் அண்ணா நுழைவு வாயிலையும் அடுத்த மாதம் 9-தேதிக்குள் திருவண்ணாமலைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.