திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் பள்ளி வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமை தாங்கி கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் திருவண்ணாமலை நகரில் உள்ள 10 பள்ளிகளில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த டேனிஷ் மிஷன் பள்ளி வளாகத்தில் இருந்து பெரியார் சிலை, மத்திய பஸ் நிலையம், அண்ணா நுழைவு வாயில் வழியாக வந்து வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்கார வேலு திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தின் போது போக்சோ சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு, சிறுமிகளை சீண்டினால் சிறை தண்டனை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தியபடியும், கோஷங்கள் எழுப்பிய படியும் மாணவிகள் சென்றனர். பின்னர் மண்டபத்தில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி வசந்தி, மாவட்ட சமூல நல அலுவலர் மீனாம்பிகை, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செல்வி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
போக்சோ நீதிமன்ற நீதிபதி பேசுகையில்,
பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொடர்பாக எந்தவித பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உடனடியாக பெற்றோரிடமும், காவல்துறையினரிடமும் தகவல் தெரிவிக்க வேண்டும். காலதாமதம் செய்தால் குற்றவாளிகள் தப்பிக்கக்கூடும். பெண் குழந்தைகள் தெரியமாக செயல்பட வேண்டும்’ என்றார். இதனையடுத்து பள்ளி மாணவ-மாணவிகள் மனஉளச்சலால் தற்கொலை செய்வது போன்ற தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுப்பதற்காக காவல் துறை சார்பில் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக 95491 74174 இலவச எண் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் அறிமுகம் செய்தார். இதற்கான அறிமுக பதாகையை போக்சோ நீதிமன்ற நீதிபதி வசந்தி பெற்றுக்கொண்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பேசுகையில்:
நீங்கள் பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர்கள் பேசினால். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோன்று மாணவிகளை கேலி, கிண்டல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி தேர்வில் மதிப்பெண் குறைந்தால் வீட்டில் திட்டுவார்கள் என பலர் மன உளச்சலில் தற்கொலை செய்வது போன்று தவறான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற தவறான செயலில் ஈடுபடக்கூடாது. மன உளச்சல் ஏற்பட்டால் காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ள ஆலோசகர் எண்ணை தொடர்பு கொண்டால் உங்களை தேடி அவர்கள் வந்து ஆலோசனை வழங்குவார்கள்.
மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக பிரச்சினைகள் இருந்தாலும் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்க வேண்டும். கோடை விடுமுறைக்கு பின் நீங்கள் பள்ளிக்கு வரும் போது அனைத்து பள்ளிகளிலும் இதுகுறித்து புகார் தெரிவிக்க காவல் துறை சார்பில் புகார் பெட்டி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மாணவிகள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். காவல்துறையினர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என இவ்வாறு அவர் பேசினார். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் திருவண்ணமாலை உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, ஆய்வாளர் ஹேமமாலினி, கவிதா உள்பட காவலர்கள், சைல்டு லைன் அதிகாரிகள் என பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்