திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அரியப்பாடி கிராமத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் பயிலும் கல்லூரி மாணவிக்கும் ஆரணி அருகே உள்ள எஸ்.வி.நகரம் கிராமத்தை சேர்ந்த தனியார் மென்பொருள் கம்பெனி ஊழியர் தமிழரசனுக்கும் வயது (26) கடந்த 8 மாதங்களாக முகநூலில் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளார் தமிழரசன். தனது காதல் குறித்து கல்லூரி மாணவி தன்னுடைய பெற்றோர்களிடம் கூறிய நிலையில் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்ள தமிழரசன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரி மாணவி ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகம் பின்னர் காவல்துறையினர் தமிழரசனை அழைத்து விசாரணை நடத்தி பெண்ணை திருமணம் செய்து அவருடன் சேர்ந்து வாழுங்கள் என கூறி அனுப்பியதாக கூறப்படுகிறது. 



அதனைத்தொடர்ந்து இருவீட்டாரின் சம்மததுடன் கடந்த மே மாதம் ஆரணி கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் ஆலயத்தில் தனியார் கல்லூரி மாணவிக்கும் தமிழரசனுக்கும் திருமணம் நடைப்பெற்றுள்ளது. ஆனால் பெண்ணை தமிழரசன் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் தனது பெற்றோரின் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளார். 3 மாதங்களை கடந்து தமிழரசன் தனது வீட்டிற்கு அழைத்து செல்லாததால் தன்னுடைய கணவரான தமிழரசன் வீட்டிற்கு சென்று கல்லூரி மாணவி நியாயம் கேட்டுள்ளார். அப்போது கணவர் தமிழரசன் மற்றும் மாமியார் மாமனார் ஆகியோர் 3 நபர்களும்  சேர்ந்து ஆபாசமாக திட்டியும் கல்லூரி மாணவி பட்டியல் இனத்தினர் என குறிப்பிட்டு திட்டியதாகவும் கூறி கல்லூரி மாணவி ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த காவல் ஆய்வாளர் அல்லிராணி விசாரணையில் தமிழரசன் மற்றும் அவரது பெற்றோர் பேசியது உண்மையானதால் தமிழரசன் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தமிழரசனை கைது செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள தமிழரசனின் பெற்றோர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.