திருப்பத்தூர் மட்டத்திற்குட்பட்ட பல்வேறு  பகுதியில் நேற்று கனமழை பெய்தது அதன் காரணமாக ஜோலார்பேட்டை ரயில்  நிலையத்தில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில்  மழைநீரும் சாக்கடை நீரும் கலந்து குளம் போல் காட்சி அளித்தது, மேலும் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியது. ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி மற்றும் பாலாறு நதியில்  நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழையால்  சேதமடைந்த வீடுகள் மற்றும் பயிர்கள் குறித்து , கணக்கீடும் பணி மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.




திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகப் பகலில் வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் புழுக்கத்தில் தவித்து வந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் திருப்பத்தூர், கந்திலி, குரிசிலாப்பட்டு, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. விடிய விடிய பெய்த பலத்த மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.


ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள 4 நடைமேடைகளிலும் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியது. சுமார் 3 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் தேங்கியது. இதனால் இன்று அதிகாலை 5 மணிக்குச் செல்லும் சென்னை செல்லும் ஏலகிரி விரைவுவண்டி ரயில் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் உடனடியாக துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து மழைநீரை வெளியேற்றினர் .




மழைநீர் வடிந்த பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காலதாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. அதேபோல் ஜோலார்பேட்டை புதுஓட்டல்தெரு, சின்னகம்மியம்பட்டு, பெரிய கம்மியம்பட்டு, ஏலகிரி, பொன்னேரி, மண்டலவாடி, குண்ணத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. 


ஜோலார்பேட்டையில் ஆங்காங்கே கால்வாய்கள் அடைபட்டு இருப்பதால் நேற்று இரவு பெய்த ஒரு நாள் மழைக்கே தண்ணீரில்  மிதக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில் உள்ள கால்வாய்கள் அங்கங்கே அடைபட்டு இருப்பதால் மொத்த கழிவுநீரும் ஜோலார்பேட்டை ரயில் சந்திப்பு பகுதி வழியாக வெளியேறி அங்குள்ள ஓட்டல் தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது.


ஏலகிரி மலையில் மண்சரிவு காரணமாகச் சரிந்து விழுந்த பாறைகள்! மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!



திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் இரவு பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு பெரிய பெரிய பாறைகள் மரங்கள் சாலையில் விழுந்து மூன்று மணி நேரம்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. சம்பவம் அறிந்து வந்த காவல்துறை, வனத் துறை, நெடுஞ்சாலைத் துறை, துறை சார்ந்த அதிகாரிகள் சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் சரிந்து விழுந்த பாறைகள் மற்றும் மரக்கிளைகளை சரி செய்தனர். 



ஏலகிரி மலைக்குச் செல்லும் பாதையில் உள்ள 3 வது மற்றும் 9வது கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன. மரங்களும் முறிந்தன. இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.