வாணியம்பாடி அருகே அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்து பெண்மணி ஒருவர் காயம் அடைந்துள்ளார் . 30 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளைச் சரி செய்து தரும்படி பொது மக்கள் பல முறை புகார் அளித்திருந்த போதிலும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால்  தான் இந்த விபத்து அரங்கேறியுள்ளது  என்று பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர் . .

 

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆவாரங்குப்பம் தலித் பகுதியில் கடந்த திமுக ஆட்சியில்  1990-ம்  ஆண்டு ஜவகர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 32 தொகுப்பு வீடுகள் கட்டி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. 

 

 



 

அந்த வீடுகள் கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் அவ்வப்போது பெய்து வரும் மழையால் வீட்டின் மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள், சிமெண்டு சிலாப்புகள் பெயர்ந்து வலுவிழந்து காணப்படுகிறது. இங்குள்ள 32 வீடுகளில் பெரும்பாலான கட்டடங்கள் முற்றிலும் சிதிலமடைந்து குடியிருக்கத் தகுதியற்றவையாக மாறியுள்ளது . 

 



 

எனவே இந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள அணைத்து வீடுகளையும் சீரமைத்துத் தரும்படி இங்குள்ள பொதுமக்கள் கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர் . 

 

இந்தநிலையில் நேற்று  இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வசித்துவரும் சரஸ்வதி (வயது 35) என்பவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, சுவர் இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை நீண்ட நேரம் போராடி அங்குள்ள பொதுமக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 



 

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுவர் இடிந்துவிழுந்த படுகாயமடைந்த சரஸ்வதியின் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளை உடனடியாக செய்யக்கோரியும், பழைய வீட்டுக் கட்டடங்களைப் புதுப்பித்துத் தரக் கோரியும் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் தகவல் கொடுத்துள்ளார் . 

 

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு அம்பலூர் வருவாய் ஆய்வாளர் சித்ரா, நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் . 

 



 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆவாரங்குப்பம் ஆதிதிராவிடர் குடியிருப்பைச் சேர்ந்த பஞ்சநாதன் என்பவர் கூறும்போது . கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் , இங்குள்ள ஆதிதிராவிடர் மக்களின் பயன்பாட்டிற்காக 32 வீடுகள் ஒதுக்கப்பட்டது . அதன்பின்பு இங்கு மக்கள் தொகை பெருகியதால் , ஒரே வீட்டில் 4 குடும்பங்கள் வரை குடும்பம் நடத்தி வருகின்றோம் . இடப் பற்றாக்குறை ஒருபுறம் இருந்தாலும் , பாழடைந்து காட்சியளிக்கும் இந்த வீடுகளில் மக்கள் வசிப்பதற்கு மிகவும் அச்சப்படுகின்றார்கள் .

 

எனவே தமிழக அரசும் , மாவட்ட நிர்வாகமும் இதனில் தலையிட்டு , இது போன்ற  அசம்பாவிதங்கள் நடக்காத வண்ணம் உரிய  பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்று ஆவாரங்குப்பம் ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளார் .