வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி சாமியார் மலை எம்.ஜி.ஆர். நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் துளசிராமன். இவரது மகன் ஆகாஷ் (20). கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி அதே பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் ஆகாஷ் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். ஆகாஷ் இறந்ததிலிருந்து, சுற்றுவட்டார கிராம மக்கள், மாலை நேரங்களில் அந்த பாழடைந்த கிணற்றின் பக்கம் செல்வதைத் தவிர்த்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, சாமியார் மலை அருகே உள்ள கந்தசாமி நகரைச் சேர்ந்த நெடுஞ்செழியன் என்பவரின் மகன் ஸ்ரீதர் (30). குடியாத்தம் செதுக்கரை பகுதியில் உள்ள வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு சுமார் 7 மணியளவில் செல்போனில் பேசியபடி அந்த கிணற்றின் வழியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த இவர், போனில் பேசியபடியே கிணற்றில் தவறி விழுந்துள்ளார். 


 




 


இந்த பாழடைந்த கிணற்றில் 25அடி ஆழத்தில் தண்ணீர் இருந்ததால், நீச்சல் தெரிந்த ஸ்ரீதர் தண்ணீரில் நீந்தியபடி தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார்.  அப்போது சற்றுத் தொலைவில் மோர்தானா கால்வாய் கரை மீது அமர்ந்திருந்த இளைஞர்கள் சிலர் கிணற்றிலிருந்து சத்தம் வருவதைக் கேட்டு கடந்த மாதம் கிணற்றில் விழுந்து இறந்த ஆகாஷின் ஆவிதான் , தங்களையும் பலி வாங்குவதற்காகக் கூச்சலிடுகின்றது  என பயந்து அடித்துக் கொண்டு அவர்களது வீட்டுக்கு ஓட்டம்பிடித்துள்ளனர். மேலும் ஆகாஷின் ஆவி அந்த பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து , கூச்சலிடுகின்றது , என்று தகவலை கிராம மக்களிடமும் சொல்லியுள்ளனர் .




இரவு முழுவதும் ஸ்ரீதர் கூச்சலிட்டபடி கிணற்றின் உள்ளேயே  இருந்துள்ளார். இந்நிலையில் காலையில் ஆகாஷ்தான் ஆவியாக வந்து கூச்சலிடுகிறான் என அக்கம்பக்கத்தினர் பேசிக் கொள்ளவே, கிணற்றில் விழுந்து இறந்துபோன தனது மகனின் குரலையாவது கேட்கலாம்  என ஆகாஷின் தந்தை துளசி ராமன்  கிணற்றுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கிணற்றில் ஸ்ரீதர் தத்தளித்துக் கொண்டு இருப்பது தெரிந்து , துளசி ராமன்  உள்ளிட்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . 


உடனே ஸ்ரீதரை கயிறுகட்டி மீட்டனர். சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு ஸ்ரீதர் மீட்கப்பட்டார். மேலும் இந்த பாழடைந்த கிணற்றை உடனடியாக மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்த கிணற்றை ஒட்டியபடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,  உயர்நிலைப்பள்ளி உள்ளது. எனவே பள்ளி திறந்தவுடன் மாணவர்கள் இந்த கிணற்றின் பக்கம் சென்று விளையாட வாய்ப்பு உள்ளது. அப்போது மாணவர்கள் அதில் தவறி விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் உடனடியாக இந்த கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர் .