வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது 68). இவர் வேலூர் அடுத்த துத்திப்பட்டில் கல்குவாரி வைத்து நடத்தி வருகிறார். அதைத்தவிர சொந்தமாக ஏராளமான லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். பிச்சாண்டி வேலூர் அல்லாபுரத்தில் உள்ள தேசிய வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நிலையில் வங்கிக்கு அடிக்கடி சென்று வந்த சமயத்தில் அங்கு காசாளராக (கேசியர்) பணியாற்றிய வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்த உமாபதியுடன் வயது (53) பழக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு பிச்சாண்டி தனக்கு சொந்தமான சுமார் 15 ஆயிரம் சதுர அடி நிலத்தை ரூ.1 கோடியே 32 லட்சத்துக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும், நிலம் வாங்குவதற்கு யாராவது விருப்பம் தெரிவித்தால் இதுபற்றி சொல்லுங்கள் என்று காசாளர் உமாபதியிடம் தெரிவித்துள்ளார். உமாபதி அந்த நிலத்தை தனது குடும்பத்தினர் பெயரில் வாங்க விரும்புவதாக கூறி முதற்கட்டமாக நிலத்துக்கு ரூ.52 லட்சம் கொடுத்து மீதமுள்ள பணத்தை விரைவில் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.


 




மேலும் ரூ.52 லட்சம் கொடுத்தற்காக பிச்சாண்டியிடம் இருந்து 3 வெற்று காசோலையை அவரின் கையெழுத்துடன் உமாபதி பெற்றுள்ளார். இதற்கிடையே உமாபதியால் மீதமுள்ள பணத்தை கொடுக்காததால் கடந்த 2019-ம் ஆண்டு பிச்சாண்டி ரூ.52 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து ரூ.63 லட்சமாக உமாபதியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவரிடம் கொடுத்திருந்த வெற்று காசோலைகளை திரும்ப பெறவில்லை. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பிச்சாண்டியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூபாய் 42 லட்சம் திடீரென மாயமானது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அவர் கையெழுத்து போட்டு கொடுத்திருந்த வெற்று காசோலையை, காசளர் உமாபதி பயன்படுத்தி ரூ.42 லட்சத்தை எடுத்து தெரியவந்தது. 


 




இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வங்கி காசாளைர் உமாபதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டு வங்கியில் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வதாக கூறி உமாபதி பலரிடம் பல லட்சம் ரூபாய் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அதன்பேரில் அவர் 40 மாதங்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் உமாபதி பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.