திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (36), இவரது சகோதரர்கள் முருகன், ரமேஷ், வெங்கடேசன். சகோதரிகள் பரமேஸ்வரி, விஜயலட்சுமி. இதில் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதில் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு வெங்கடேசன் இறந்துவிட்டார். இவர்களது தந்தை சிவப்பிரகாசம் சொத்துக்கு சொந்தமான 3 சென்ட் வீட்டுமனையில் ஒரு பகுதியில் பூ வியாபாரியான பிரபு மற்றும் அவரது மனைவி சரண்யா (27), மகள்கள் டிஸ்ஷாதேவி (9), வெஸ்மிதா (8), மகாலட்சுமி (6) ஆகியோருடன் அங்கு வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மற்ற 2 நபர்களும் அதே கிராமப்பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இது தவிர அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவில் பிரபுவின் தந்தை சிவப்பிரகாசத்திற்கு சொந்தமான 3 சென்ட் இடம் உள்ளது. இவற்றை 3 ஆக ஆளுக்கு ஒரு சென்ட் என பிரித்து கொள்ளும்படி தந்தை சிவப்பிரகாசம் கூறியுள்ளாராம். இதனால் பிரபு, அவரது அண்ணன்களான முருகன், ரமேஷ் ஆகியோருடன் இணைந்து தங்கள் பெயருக்கு பாகப்பிரிவினை செய்ய முடிவு செய்து விஏஓ சீனிவாசனிடம் கூறியுள்ளனர். அந்த இடம் நத்தம் புறம் போக்கில் இருந்ததும், சில ஆண்டுகளுக்கு முன்புதான் சிவப்பிரகாசத்தின் பெயருக்கு பட்டா வழங்கப்பட்டதும் தெரிந்தது.
இந்நிலையில் விஏஓ சீனிவாசன், பிரபுவிடம், 'நில அளவு செய்வது சர்வேயர் பணி என்பதாலும், பிரிக்கப்போகும் இடம் கூட்டுப்பட்ட என்பதால் இதற்கு கொஞ்சம் செலவாகும்' என கூறினாராம். இவர்களிடம் கேட்டு கொண்டதன் பெயரில் விஏஓ விடம் பிரபு மற்றும் அவரது சகோதரர்கள் பணம் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு பட்டா மாற்றி தராமல் விஏஓ அலைகழித்துள்ளார். ஏற்கனவே கொடுத்த பணம் போக, மீண்டும் 10 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என விஏஓ கேட்டுள்ளாராம். அதனை தொடர்ந்து மனமுடைந்த பிரபு, நேற்று முன்தினம் ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் அருகே உள்ள குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு குளக்கரையில் தனது செல்போனை வைத்து பேஸ்புக் வளையதளத்தில் லைவில் பேசியுள்ளார். அதில், நான் தனிப்பட்டா கேட்டு மனு அளித்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகின்றது விஏஓவால் அலைக்கழிக்கப்பட்டேன். இதற்கு ஊராட்சி தலைவர் பிரபாவதியும் உடந்தையாக இருந்தார்.
தனிப்பட்டா வழங்க விஏஓ (10 ஆயிரம் லஞ்சம் கேட்டதால் தற்கொலை செய்து கொள்கிறேன். சம்பந்தப்பட்ட விஏஓ மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மீது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். எனது தற்கொலைக்கு இவர்கள் தான் காரணம் எனது இறப்புக்கு பின்னர் எனது குடும்பத்தாருக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என இவ்வாறு பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ காட்சி பேஸ்புக்கில் வைரலானது இதையறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குளக்கரையில் பிரபுவை நீண்டநேரம் தேடினர். அதன்பின்னர் அவரை சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன் மற்றும் களம்பூர் காவல்துறையினர் விரைந்து சென்று பிரபுவின் சடலத்தை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பிரபுவின் மனைவி சரண்யா களம்பூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் ஆரணி நகர ஆய்வாளர் கோகுல்ராஜ் வழக்கு பதிவு செய்து விஏஓ சீனிவாசன் மற்றும் ஊராட்சி தலைவர் பிரபாவதி ஆகியோரை விசாரித்து வருகிறார். இதற்கிடையே ஆரணி ஆர்டிஓ கவிதா, தாசில்தார் சுபாஷ்சந்தர் தலைமையிலான வருவாய்த்துறையினரும் பிரபுவின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷுக்கு அறிக்கை வழங்கினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், விஏஓ சீனிவாசனை சஸ்பெண்ட் செய்து ஆர்டிஓ கவிதா அதிரடியாக உத்தரவிட்டார். இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.