விவசாயிக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்யாமல் 4 மாதங்களாக அலைக்கழித்ததாக, கைக்குழந்தையுடன் ஒரு  குடும்பத்தினர் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில்  தர்ணா போராட்டம் நடத்தினர். வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியைச் சேர்ந்தவர்  ஜோதி (வயது 72 ) இவருடைய மனைவி  லட்சுமி (வயது 65)  இவர்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ் (வயது 30 ) , ரோஸி (வயது 31 ) மற்றும் ரீட்டா (வயது 27 ) என மூன்று பிள்ளைகள் உள்ளனர் .

 



 

 கடந்த 12 வருடத்திற்கு முன்பு லட்சுமி  இறந்துவிட்ட  நிலையில் தந்தை ஜோதி 6  மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். சுபாஷ் மற்றும் ரோஸிக்கு திருமணம் நிறைவுபெற்ற நிலையில், ரீட்டாவுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை . இவர் தற்பொழுது அவரது சகோதரர் சுபாஷின் பராமரிப்பில் உள்ளார் . இந்த நிலையில்  இவர்களது தந்தைக்கு  சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தில் பிள்ளைகள் சுபாஷ் , ரோஸி , ரீட்டா ஆகியோர் விவசாயம் செய்து வந்துள்ளனர் .

இந்நிலையில் இவர்களின் சித்தப்பா கோவிந்தன் (வயது 60 ) இவரது  மகன்கள் பாபு(பாபு 31), சதீஷ் (வயது 28), மற்றொரு சித்தப்பா மகன் சங்கர் ஆகியோர்  அவர்களது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்துள்ளனர்.

 

எனவே இவர்களுக்குச் சொந்தமான  நிலத்தை அளவீடு செய்து தனிப்பட்டா  மாற்றும் செய்து தரக்கோரி ராணிப்பேட்டை  மாவட்ட ஆட்சியர் ,  வட்டாட்சியர் , டிஎஸ்பி அலுவலகம் என அனைத்து துறை அதிகாரிகளிடம்  கடந்த 4 மாதங்களில் 8 புகார் மனுக்களை அளித்துள்ளனர். ஆனால் அவர்களது புகார் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்துள்ளனர் .

 



 

மேலும் நில அளவீடு செய்ய வரும்போது அதே  பகுதியில்  பணிபுரியும் சிப்பந்தி சீனிவாசன் என்பவர் எதிர் தரப்பினரிடம் (அவர்களது சித்தப்பாவிடம்)  கையூட்டு பெற்றுக் கொண்டு அவருக்குச் சாதகமாக நடந்துகொண்டுள்ளார் .  இதனால் நான்கு மாத காலமாக தங்களை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருவதால் மனமுடைந்து விரக்தியடைந்த   சுபாஷ் அவரது மனைவி மீனா (வயது 25 ) இவர்களது நான்கு பெண்குழந்தைகள் மற்றும்
  சுபாஷின் தங்கை  ரீட்டா ,ஆகியோர் குடும்பத்துடன்  வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனால் இன்று வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

மேலும் கொரோனா காலகட்டத்தில் தங்கள் கைக்குழந்தைகளுடன் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிப்பதாகத் தெரிவித்த அவர்கள், சிப்பந்தி  சீனிவாசனைப் பணிமாற்றம் செய்து   தங்களுக்கு உடனடியாக  நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இல்லையெனில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொல்வதற்கு அனுமதி அளிக்கும்படி  தெரிவித்தனர் .

 



 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததால் வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உடனடியாக சம்மந்தப்பட்ட இடத்திற்கு அலுவலர்களை அனுப்பிவைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியதன் பேரில்  சுமார் 2 மணிநேரத்திற்கு பின்னர் போராட்டத்தைக் கைவிட்டனர்.