ஜோலார்பேட்டை அருகே நாட்டியாலயா நிகழ்ச்சியில் பாட்டை ஒன்ஸ்மோர் போடுங்க என்று கேட்டு போலீஸ் சட்டையை கிழித்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருவிழா என்று வந்துவிட்டால் நாட்டியாலயா இல்லாத திருவிழா கிடையாது என்று கூட சொல்லலாம் அந்த அளவிற்கு பொதுமக்கள் சினிமா பாடலுக்கு நடன கலைஞர்கள் நடனமாடும் நடன நாட்டியாலயா மீது பிரியம் கொண்டு உள்ளனர்.
இருந்த போதிலும் நடன நாட்டியாலயா நடைபெற்றால் தகராறு இல்லாத ஊரே கிடையாது. ஒவ்வொரு இடத்திலும் நாட்டியாலயா நடக்கும் போது கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. இருந்த போதிலும் வேடிக்கை பார்க்கும் நபர்கள் குடிபோதையில் நடனம் ஆடுவதால் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் குரிசிலாப்பட்டு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் போதையில் நடனமாடிக் கொண்டிருந்த நபரை தட்டி கேட்டபோது சிவசங்கர் போலீசாரை அடித்தாக கூறப்படுகிறது. சில போலீசாரின் அழுத்தத்தின் காரணமாக சிவசங்கர் போலீஸ் புகார் கொடுக்காமல் சென்றார்.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் பகுதியில் மாரியம்மன் திருவிழாவின் போது நடன நாட்டியாலயா நடைபெற்றுள்ளது. அப்போது ஜோலார்பேட்டை போலீசார் 10க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நாட்டியாலயா நிகழ்ச்சி நடந்து முடிந்த தருவாயில் கோவிந்தராஜ் (40) என்பவர் பாட்டை மீண்டும் ஒன்ஸ்மோர் போடுங்க என்று போதையில் அலப்பறை செய்துள்ளார்.
நடன நிகழ்ச்சி மூன்று மணி நேரம் மட்டுமே நடக்க வேண்டும் என்று நேரம் குறிப்பிட்டுள்ள நிலையில் அந்த நேரத்தை கடந்து நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று போலீசார் தடுத்துள்ளனர். இதனால் போதை சாமிக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கடுமையான போதையில் இருந்த கோவிந்தராஜ் என்பவர் கணேஷின் சட்டையை கிழித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் கணேஷ் அளித்த புகாரின் பேரில் திரியாலம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நடன நாட்டியாலயா நிகழ்ச்சியில் போதை ஆசாமி போலீசாரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.