முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற தலைப்பில் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்கும் நிகழ்ச்சி இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருந்ததி காலனி பகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பொறுப்பாளராக தலைமை கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட டாக்டர் மாலதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.




 


பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரை ஆற்றுகையில்,


சுதந்திர இந்தியாவிற்கு பிறகு தமிழ்நாட்டில் காமராஜர், அண்ணா , எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட பல முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆண்டு உள்ளனர். ஆனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் ஆதிதிராவிட மற்றும் தொழிலாளர் பெருமக்களுக்காக சமுதாயத்தில் நலிந்துள்ள மக்களுக்காக அதிக அளவில் ஆணையை பிறப்பித்து செயல் திட்டம் ஆக்கியவர் தமிழக முதல்வர் கலைஞர் என பெருமிதத்தோடு கூறினார். சமுதாய புரட்சியை ஏற்படுத்தியவர் தலைவர் கலைஞர் என்று பேசிய அவர், அறிவு படைத்தவர்கள், நடுத்தர மக்கள், விபரம் அறிந்தவர்கள், சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், நாட்டின் மீது வளர்ச்சி குறித்து சிந்திப்பவர்கள், மக்களுக்கு உதவுபவர்கள் அப்படிப்பட்டவர்கள் என அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருப்பது என்பதுதான் பெருமை என எண்ணுகிறார்கள் என தெரிவித்தார்.


 




 


ஜனநாயகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருக்கிறது நேற்று மழையில் முளைத்த காளான் போல் வருகிறார்கள். ஆனால் அவர்கள் அவர்களின் தலைவர்களை நாளைய முதல்வர் என கூறிக்கொள்கின்றனர். ஆனால் அவர்களால் கூறிக்கொள்ள மட்டுமே முடியும், அவர்கள் வந்த வழி தெரியாமல் சென்று விடுகின்றனர், என சுட்டிக்காட்டிய அவர் திமுக தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி எனவும் தமிழர்கள் முன்னேறவும் தமிழர்கள் தலை நிமிர்ந்து இருக்கவும், சமுதாயத்திற்காக, சமுதாயம் மேம்படுவதற்காகவும் உருவாக்கப்பட்ட கட்சி தான் திமுக என சுட்டிக்காட்டி அமைச்சர் பேசினார்.


இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஏராளமான பட்டதாரி பெண்கள் படிக்காத பாமர பெண்கள் என அனைவரும் ஆர்வமுடன் உறுப்பினர் கட்டணமாக பத்தாயிரம் ரூபாய் செலுத்தி தங்களை திமுகவில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்‌. அண்ணாத்துரை,தடகலவிளையாட்டு சங்க மாநில தலைவர் எ.வ.வே. கம்பன் நகர்மன்ற தலைவர் வேல்மாறன் , முன்னாள் நகர்மன்ற தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.