திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதை விட்டுவிட்டு ,நாட்டு நலனில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Continues below advertisement

வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த திமுக தலைமை கழக பேச்சாளரும் மாவட்ட பிரதிநிதியுமான கழிஞ்சூர் கண்ணன் உடல் நலக்குறைவால் கடந்த 17ஆம் தேதி அன்று உயிரிழந்தார். இந்த நிலையில் கழிஞ்சூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அலங்கரித்து திருவுருவப்படத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மலர் தூவி மரியாதை செய்ததுடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தார்.

 

Continues below advertisement

பெயர் மாற்றிக் கொண்டே இருந்தால்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, “காமராஜர் கொண்டு வந்தது மத்திய உணவு திட்டம் அதற்கு பெயரிட்டாலும் பரவாயில்லை, எம்ஜிஆர் அவர்கள் அதை விரிவு படுத்தினார். அவர் பெயர் வைத்தாலும் பரவாயில்லை. காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின். அந்தப் பெயரை மாற்றுவதில் ஒரு முதலமைச்சர் ஈடுபடுவது முறையல்ல இப்படிப்பட்ட விஷயங்களில் அவர் கவனம் செலுத்துவதை விட நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி என்பதில் அவர் கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு தெரியாவிட்டாலும் பக்கத்தில் உள்ள அதிகாரிகள் அவருக்கு தெரிவிக்க வேண்டும். அதுதான் நல்லதே தவிர, பெயர் மாற்றிக் கொண்டே இருப்பது விரும்பத்தக்கது அல்ல. 

அம்மா உணவகத்தை மாற்றியிருக்கலாம்

ஜெயலலிதா படம் போட்ட பைகள் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இருந்தது. இதை மாற்ற வேண்டுமா என கேட்டபோது தேவையில்லை. அரசாங்கத்தின் பணத்தில் தான் அடிக்கப்பட்டது. அதனால் அதே படத்துடன் இருக்கட்டும் என்று தான் தளபதி தெரிவித்தார். அந்த பெருந்தன்மை தற்போது உள்ள முதலமைச்சருக்கு வரவேண்டும். அம்மா உணவகம் என்று அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தார்கள். நாங்கள் நினைத்திருந்தால் அதை மாற்றி இருக்க முடியும். ஆனாலும் தேவையில்லை ஒரு முதலமைச்சர் ஆரம்பித்திருக்கிறார். அப்படியே இருக்கட்டும் என்று நாங்கள் பெருந்தன்மையாக இருந்தோம். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு அரசியல் கட்சி நீண்ட நெடுங்காலம் பாரம்பரியம் உள்ள ஒரு கட்சி இதனால் சில நீக்கு போக்குகள் தெரியும். ஆனால் தற்போது உள்ள கட்சி ஒரு ரெடிமேட். அதனால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது” என்றார்.

டெல்லியில் நடந்த காவிரி ஆணைய கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, “எப்போதுமே தண்ணீர் இல்லை என கர்நாடகா அரசு சொல்லுவார்கள். தண்ணீர் முழுவதுமாக நிரம்பி டேம் உடையும் நிலைமையில் இருந்தால் மட்டுமே தண்ணீர் விடுவார்கள். இவை எல்லாம் எனக்கு கேட்டு கேட்டு புளித்துப்போன சப்ஜெக்ட்” என்றார்.

முதல்வரை அவதூறாக பேசுகிறார்கள் என்று கைது நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு, “எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது மதியழகன் உடைய தம்பி கிருஷ்ணசாமி பொதுக்கூட்டத்தில் பகிரகங்கமாக எம்ஜிஆர் ஆணையிட்டால் நான் நேராக கோபாலபுரம் சென்று கருணாநிதி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு வந்து மேஜை மேலே வைப்பேன் என்று கூறினார். இதற்கு கலைஞர் தலையை வெட்டுவேன் என கூறியிருக்க மாட்டார், கிராப் வெட்டுவேன் என கூறி இருப்பார்” என நகைச்சுவையாக பேசினார்.