தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் சரியான முறையில் இயங்காமல் இருந்து வந்தது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக மீண்டும் பள்ளிகள் சீராக இயங்கி தொடங்கியது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் 13 ம் தேதி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. அதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு , பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு மே 31-ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதற்கிடையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 13 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. அதனை அடுத்து திட்டமிட்டபடி ஜீன் 13 ம் தேதி தமிழகம் முழுதும் பள்ளிகள் திறக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வழக்கம்போல் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.


 


 






 


கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் செயல்பட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்துக்கு உட்பட தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி வாகனங்கள் செயல்திறன் குறித்து அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல், மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி ஆகிய அதிகாரிகள் அடங்கிய கூட்டாய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 


 




இந்த சோதனையில் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்துக்கு உட்பட பள்ளிகளில் உள்ள 439 வாகனங்களை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார். பள்ளி வாகனங்களில் தீயணைப்பான், முதலுதவி பெட்டி, வாகனத்தின் இருக்கைகள் மற்றும் தலம், வாகன சக்கரத்தின் தன்மை, ஆவணங்கள், பதிவுச்சான்று, அனுமதிச்சீட்டு, உள்ளிட்ட வாகனத்தின் தகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து தகுதி இல்லாத 47 வாகனங்கள் நிராகரிக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்ட கூட்டாய்வு குழுவினர் தெரிவித்தனர். மேலும், பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு விபத்து ஏற்பட்டால் எப்படி முதலுதவி செய்வது என்றும், வாகனத்தில் திடீரென தீப்பிடித்தால் அதனை எப்படி அணைக்கவேண்டும் என்றும் தீயணைப்பு துறை சார்பில் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக பேருந்து ஆய்வில் வெறுமனே பார்வையிடாமல் இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் பள்ளி பேருந்துகளை தானே ஓட்டிப்பார்த்து ஆய்வு செய்தார்.