படிப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்து இன்றைய தலைமுறையினர் வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும் என தருமபுரி புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேசினார்.

 

தருமபுரி மாவட்ட நிர்வாகத்துடன் தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து ஜூன் 24 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. இந்த கண்காட்சியில் 100 அரங்குகளில் 50 ஆயிரம் தலைப்புகளில் 10 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்காக வர உள்ளது. இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்ற 10 நாட்களும் மாலை நேரங்களில் அறிவு சார் அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.  



 

தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம், 'பொறுத்தார் பூமி ஆள்வார்'  என்று ஒரு பழமொழி கூறுவார்கள். அதை பெரிய அளவில் நம்பிய நான், படிக்கிற காலத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆற அமர சில ஆண்டுகள் எடுத்துக் கொண்டு மிகப் பொறுமையாக படித்து, படிப்பை முடித்து தேறினேன். ஆனாலும் அரசியல் துறையை தேர்வு செய்து அதில் கடுமையாக உழைத்து இன்றைய நிலையை அடைந்துள்ளேன். ஆனால் இன்றைய சூழல் வேறாக உள்ளது. இளைய தலைமுறையினர் அவசியம் படித்தே ஆக வேண்டும். நம் வாழ்க்கைக்கு படிப்பு மிக அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  மாணவப் பருவம் என்பது ஒவ்வொருவரையும் நல்வழிப்படுத்தப்பட வேண்டிய பருவமாகும். அதை படிப்பால் மட்டுமே செய்ய முடியும். அதற்கு புத்தகங்கள் அவசியம். நவீன செல்போன்களும் சமூக ஊடகங்களும் சாதாரணமாகி உள்ள இன்றைய சூழலில் அவைகளுக்கு அடிமையாகி விடாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். படிப்பறிவு ஒரு மனிதனுக்கு நல்ல மன நிலையை உருவாக்கும்.

வாசிப்புப் பழக்கம் ஒவ்வொருவரையும் நல்வழிப்படுத்தி அவர்களை நல்லவர்களாக உருவாக்க துணை நிற்கும். படிப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்து இன்றைய தலைமுறையினர் வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும். இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமங்கள் வரை நடத்தப்பட வேண்டும்” எனப் பேசினார்.



 

இந்நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தருமபுரி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், ஜி கே மணி, தகடூர் புத்தக பேரவையை சேர்ந்த சிசுபாலன், ஆசிரியர் தங்கமணி, ராஜசேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண