திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற வரும் 10ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 7ஆம் நாள் விழாவாக 16ஆம் தேதி காலை பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும், 10 ஆம் நாள் விழாவாக 19ஆம் தேதி அதிகாலை கோவிலின் உள்ளே 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பல்வேறு துறைகளின் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சி தலைவர் முருகேஷ் தலைமை தாங்கினார். 



இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் முருகேஷ்: தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி தொற்று பரவலை தடுக்கும் விதமாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் விழாவில் நாளொன்றுக்கு 10,000 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் விழா நாட்களில் சாமி அபிஷேகம் மற்றும் வீதியுலா புறப்பாடு நேரங்கள் தவிர்த்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக வருகிற 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மற்றும் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நாள்தோறும் 10 ஆயிரம் பக்தர்கள் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வரும் 19ஆம் தேதியன்று பரணி தீபம் மற்றும் மகா தீபம் நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. தீபத்திருவிழா நாட்களில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் நடைபெறும் நாளினை தவிர ஆன்லைன் மூலம் கட்டணமில்லாமல் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய வரும் 10 ஆயிரம் பக்தர்களில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 30 சதவீதமும், பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு விகிதாச்சாரத்தின் படி பிரித்து அனுமதிக்கப்படுவார்கள்   என தெரிவித்தார். 




மேலும் தீபத்திருவிழா நிகழ்வுகள் தொலைக்காட்சிகள், உள்ளூர், கேபிள் டி.வி.க்கள் மற்றும் கோவில் நிர்வாகம் மூலம் யூடியூப் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பொதுமக்கள் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இந்த ஆண்டு மேற்கண்ட கட்டுப்பாடுகளுடன் கார்த்திகை தீபத் திருவிழா நடத்தப்படுகிறது.  பொதுமக்கள் மேற்காணும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை, மாவட்ட நிர்வாகம் வழங்கும் அறிவுரைகள் பின்பற்றி கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார். 


இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் (ஊரக வளர்ச்சி) பிரதாப், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார், மாவட்ட வன அலுவலர் அருண்லால், உதவி மாவட்ட ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவிதேஜா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்