திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஜமுனாமரத்துர் அடுத்த மேல்விளாமுச்சி கிராமத்தை சேர்ந்தவர் காசி (35), கூலி தொழில் செய்து வருகின்றார். மேல்சிலம்பாடி அருகே உள்ள மொட்டூர் கிராமததை சேர்ந்தவர் சேட்டு (30) இவர்கள் இருவரும் நண்பர்கள் இதில் சேட்டுக்கு திருமணம் ஆகவில்லை. தனது நண்பர் காசி வீட்டிற்கு சேட்டு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது காசியின் மனைவி சுருணாவிற்கும் சேட்டுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  அதனை தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்பு காசி வீட்டில் இல்லாதபோது, அவரது வீட்டிலிருந்து சேட்டு சில மணி நேரம் கழித்து வெளியே வந்துள்ளார். இதனை  காசியின் உறவினர் ஒருவர் பார்த்து அவரை பிடிக்க துரத்தியுள்ளார்.  ஆனால் அவர் சிக்காமல் ஓடி விட்டாராம். இந்த தகவல் ஊரில் உள்ள பொதுமக்களுக்கு தெரிந்து அரசல் புரசலாக பேசியுள்ளனர். இதற்கிடையில் சேட்டுவும் காசியின் மனைவி சுகுணாவும் கடந்த ஜூலை மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டனர்.



காசி இதுகுறித்து பல்வேறு இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால். தனது மனைவியை சேட்டு கடத்தி சென்றதாக ஜமுனாமரத்தூர் காவல்நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் காசி புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தப்பியோடிய கள்ளக்காதல் ஜோடி மீண்டும் ஊர் திரும்பியது. அப்போது இதனால் தனது மனைவியை கூட்டிச் சென்ற சேட்டுவை தீர்த்துக்கட்ட காசி திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி மோட்டூர் கிராமத்தில் இருந்து சேட்டு தினமும் காலையில் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு ஆடுகள் மேய்க்க செல்வதை கவனித்து வந்துள்ளார். 


இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கத்திற்கு மாறாக சேட்டு ஆடு மேய்க்க செல்லாமல், தனக்கு வேறு வேலை இருப்பதாக சொல்லி விட்டு தனது தம்பி கார்த்திக் (25) என்பவரை ஆடு மேய்க்க அனுப்பியுள்ளார். அதனை தொடர்ந்து கார்த்திக் மற்றும் அவரது மனைவி சினேகா ஆகிய இருவரும் காட்டிற்கு ஆடு ஓட்டிச்சென்று ஆடுகளை மேய்ந்து கொண்டிருத்தனர். அண்ணன் சேட்டுவும், கார்த்திக்கும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதால் அவரை சேட்டு என நினைத்து புதர் மறைவில் மறைந்து கொண்டிருந்த காசி வைத்திருந்த நாட்டுதுப்பாக்கியால், கார்த்திக்கை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில் கார்த்திக் உடலில் பல்வேறு இடங்களில் குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் மனைவி சினேகா அலறி அடித்து ஓடிச்சென்று உறவினர்களுக்கு தகவல் அளித்தார். 



இதையடுத்து அங்கு விரைத்து வந்த அண்ணன் சேட்டு மற்றும் உறவினர்கள் கார்த்திக்கை மீட்டு ஜமுனாமரத்துர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைகாக சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து ஜமனாமரத்தூர் காவல்நிலையத்தில் சேட்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவு பேரில் போளுர் துணை காவல்கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையில் கலசபாக்கம் காவல் ஆய்வாளர் ஜனார்த்தனன் மற்றும் ஜமனாமரத்தூர் துணை ஆய்வாளர் குபேந்திரன், தனிப்படை காவலர்கள் ஜவ்வாதுமலை காடுகளில் பதுங்கி இருந்த காசியை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிறிது நேரம் பிறகு காவல்துறையினர் காசியை பிடித்து கைது செய்தனர். மேலும் காசி மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியினை பரிமுதல் செய்து விசாரணை நடத்தி காசியை பின்னர் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.