தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகிறது. கொசு கடியால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மூன்று நாட்களுக்கு மேலாக தீவிரமான காய்ச்சல், தலைவலி, உடலில் அலர்ஜி, மூட்டு மற்றும் தசைகளின் வலி இருப்பது டெங்கு காய்ச்சலில் அறிகுறிகள் என கூறப்படுகிறது. தீவிர பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது அவசியமாகிறது. ஆனால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில உணவு முறைகள் மூலம் டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே தடுக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குழந்தைகள் உட்பட 30-க்கு மேற்பட்ட பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 


 





 


ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றதால் ஏ.டி.எஸ்., கொசுக்கள் உருவாகி அதன்மூலம் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது. இதனால் சிலருக்கு காய்ச்சல், சளி போன்ற வியாதிகள் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மழை பொழிவால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி போன்ற பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கழிவுநீர் போன்ற பகுதிகளில் மழை நீர் அப்படியே தேங்கி இருந்ததால் ஏடி.எஸ் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.




 


கடந்த வாரத்தில் வந்தவாசி அடுத்த சென்னாவரம், வல்லம், நெல்லியாங்குளம், நல்லூர், ஆகிய கிராமங்களை சேர்ந்த 4 பேர் டெங்கு பாதிப்பால் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 2 பேர் உயர் சிகிச்சைக்காக சென்று விட்டனர். ஒருவர் சிகிச்சை முடிந்து நலம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மற்ற ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் 4 பேர் டெங்கு பாதிப்பால் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் வந்தவாசி பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். டெங்குவால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு தனி வார்டு அமைத்து தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள தனியார் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஆங்காங்கே குவித்துவைக்கப்பட்டுள்ள பழைய டயர்கள் மற்றும் தேவையற்ற பொருட்களில மழை நீர் தேங்கி நிற்கும் அவலம் நீடிக்கிறது. மேலும் அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி இருப்பதால் டெங்கு கொசுக்கள் அதிகளவிற்கு உற்பத்தியாகி பொதுமக்கள் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுவருகிறது.