ஆந்திரா மாநிலம் நாகலாபுரம் திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரம்யா வயது (38). இவருக்கு சென்னையை சேர்ந்த குமாரசாமி என்பவருடன் 2007-ஆம் ஆண்டு திருமணம் நடந்து உள்ளது. இவர்களுக்கு கிருபா லட்சுமி, என்ற பெண் குழந்தை பிறந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், குமாரசாமி உடல் நலக்குறைவால் 2020-ஆம் ஆண்டு மரணமடைந்த நிலையில், பெண் குழந்தையின் பாதுகாப்பு கருதி ரம்யா matrimony மூலம் வரண் பார்த்து திருப்பத்தூர் செட்டித் தெருவைச் சேர்ந்த குபேரன் மகன் வினோத்குமார் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் 2021 நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு முன்பு விதவை பெண்ணை மணம் முடித்து வாழ்வு கொடுப்பதாகவும், சமூக சீர் திருத்தத்திற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என ஆசை வார்த்தை கூறி ரம்யாவை திருமணம் செய்துகொண்டுள்ளார் வினோத்குமார்.


 




 


திருமணத்தின் போது 50 சவரன் தங்க நகையும், 4-கிலோ வெள்ளிப் பாத்திரங்களும் சீதனமாக வினோத் குமாருக்கு கொடுத்து உள்ளனர் ரம்யாவின் வீட்டார். இந்த நிலையில், வினோத் வேலூரில் உள்ள தனியார் பைனாஸ் பேங் ஒன்றில் வேலை செய்வதாக கூறி ரம்யாவை வேலூர் அடுத்த அரியூர் பகுதியில் வாடகை வீடு எடுத்து குடிவைத்து இருக்கிறார். அப்போது ரம்யாவிடம் ''நம் குழந்தையை நன்றாக படிக்க வைக்கலாம் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறி ரம்யாவிடம் இருந்து 14 லட்சம் ரூபாய் பணமும் தவணை முறையில் விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கிய வினோத், காரை ரம்யாவுக்கு தெரியாமல் விற்பனை செய்தும் 14 லட்சம் பணத்தை ஊதாரி தனமாக குடித்து அழித்து இருக்கிறார். இது சம்பந்தமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஆன நிலையில் ரம்யாவை அடித்து துன்புறுத்தி வீட்டின் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.


 




 


 


இது சம்பந்தமாக அவசர உதவி எண் 100 க்கு ரம்யா போன் செய்துள்ளார். விவரம் அறிந்து ரம்யாவின் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் பூட்டை உடைத்து ரம்யாவை மீட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து தான் வினோத்தின் மற்றொரு முகம் ரம்யாவுக்கு தெரியவந்துள்ளது. காவல்துறையினரின் விசாரணையில் வினோத்திற்கு ஏற்கனவே 2-திருமணம் நடந்து இருப்பதும், முதல் மனைவிக்கு 18 வயதில் மகன் இருப்பதும் 2-வது மனைவி மரணம் அடைந்ததும், 3-வதாக ரம்யாவை திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது. ரம்யாவிடம் இருந்து வாங்கிய பணத்தில் முதல் மனைவியின் மகனுக்கு 2-லட்சம் மதிப்பில் விலை உயர்ந்த பைக் வாங்கி கொடுத்ததும், லட்சக் கணக்கில் பணத்தை கொடுத்து பல பெண்களோடு உல்லாசமாக இருந்து செலவு செய்து அழித்ததும் தெரியவந்துள்ளது.


இந்த நிலையில், வினோத்திடம் இருந்து ரூ.14 லட்சம் பணத்தையும், 50 சவரன் தங்க நகைகளையும் 4 கிலோ வெள்ளி பொருட்களையும், விலை உயர்ந்த காரையும் பெற்றுத் தந்து வினோத் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கூறி, ரம்யா வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமியிடம் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட டி.ஐ.ஜி முத்துசாமி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.