'கோவாக்சின், கோவிஷீல்டு’ தடுப்பூசிகளைக் கலந்து பயன்படுத்துவது குறித்த ஆய்விற்கு வேலூர் சி.எம்.சி.க்கு மத்திய அரசின் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து, ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து , இரண்டு வகையான தடுப்பூசிகள் செலுத்தி ஆய்வுசெய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


கொரோனா வைரசுக்கு எதிராக நம் நாட்டில் 'கோவாக்சின், கோவிஷீல்டு,' என இரண்டு தடுப்பூசிகள் அதிகப்படியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரண்டு தடுப்பூசிகளோடு ரஷ்யா நாட்டின் ஸ்புட்னிக்-V, தடுப்பூசியும் செலுத்தபட்டு வருகின்றது .


இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளைக் கலந்து செலுத்தப் படுவதால் , கொரோனா நோய்த் பரவலை கட்டுப்படுத்தும்  எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பதாகச் சமீபத்தில் நடத்த ஆராய்ச்சி முடிவில் வெளியானது , இந்த நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியைக் கலந்து அளிப்பது தொடர்பான ஆய்வுகளில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாகவும், அப்படிப் போடுவது பாதுகாப்பானது மட்டும் அல்லாமல், சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிப்பதாகவும்,  ஐ.சி.எம்.ஆர் (ICMR ) எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்தியத் தொற்று நோயியல் நிறுவனம் இணைந்து ஆய்வு நடத்தின.


 




இந்நிலையில், இரண்டு தடுப்பூசிகளைக் கலந்து செலுத்தினால் ஏற்படும் பயன்கள், விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரிக்குக் கடந்த ஜூலை 29-ஆம் தேதி  அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சி.எம்.சி. மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சி.எம்.சி. மருத்துவமனையின் செய்தி தொடர்பு அலுவலர் துரை ஜாஸ்பர் தெரிவிக்கையில், உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகர்ப் பகுதியில் முதல் டோஸாக கோவீஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட 18 பேருக்குத் தவறுதலாக அடுத்த டோஸ் , கோவாக்ஸின் செலுத்தப்பட்டது . தடுப்பூசிகளைக் கலந்து போடுவதால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை அறிய ஐ.சி.எம்.ஆர். ஆய்வு நடத்தின.


இதில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி இரண்டு டோஸ்கள் போட்டுக்கொண்ட தலா 40 பேர் மற்றும் தடுப்பூசிகள் கலந்துபோடப்பட்ட உ.பியைச் சேர்ந்த 18 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் தடுப்பூசிகள் கலந்து போடப்பட்டவர்களுக்கு உடல் ரீதியாகப் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.


கடந்த மே மாதம் தொடங்கி , ஜூன் மாதம் இறுதி வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் , ஒரே தடுப்பூசியை இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்களை விடத் தடுப்பூசியைக் கலந்து போட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிக வீரியத்துடன் இருப்பது தெரியவந்தது. மேலும் கொரோனாவின் மாறுபட்ட வகையான  'ஆல்பா பீட்டா டெல்டா' வகை தொற்றுகள் மீது தடுப்பூசி கலப்பு அதிக செயல்திறனுடன் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது . 




இதனையடுத்து வேலூர் சி.எம்.சி.யில் 300  முதல் 600 ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை கலந்து  பரிசோதனை செய்யும் பணிகள் இந்த மாதம் தொடக்கத்தில் தொடங்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துரை ஜாஸ்பர் தெரிவித்தார்