திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், ராஜ்குமார் உள்ளிட்ட இருவரும் இணைந்து செய்யாரை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிதி நிறுவனத்தை தொடங்கி அதற்கு செய்யார், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிளை அலுவலகங்களை தொடங்கி 500 முதல் 25 ஆயிரம் வரை தீபாவளி சீட் பண்ட் பல்வேறு குழுக்களாக பிரித்து நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் நடத்தி வந்த நிலையில் இதனை விரிவுபடுத்தி மளிகை பொருள், பட்டாசு, தங்க நாணயங்கள் உள்ளிட்ட வகையில் வழங்கும் சிட்பண்டுகளையும் நடத்தி வந்தனர். இதில் இவர்கள் நிதி நிறுவனத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏஜென்ட்களை நியமனம் செய்து அவர்களுக்கு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை சலுகைகளையும் வெளியிட்டு அவர்கள் மூலமாக ஒவ்வொரு ஏஜெண்டுகளும் தலா 200 முதல் 2000 உறுப்பினர்களை சீட்டு நிறுவனத்தில் இணைத்துள்ளனர்.
மேலும் இது ஒரு புறம் இருக்க ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டினால் 5 சவரன் தங்க நகை, வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்டவைகள் வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டதை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இதில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில் கிட்டத்தட்ட ரூ. 30 கோடி அளவிற்கு பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து சீனிவாசன் மற்றும் ராஜ்குமார் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் செய்யார் காவல் நிலையம், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என பல இடங்களில் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் செய்யாறு காவல்துறையினர் 11 லட்சம் மோசடி செய்ததாக சீனிவாசனை மட்டும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.
ஆனால் மோசடிக்கு முக்கிய காரணமான ராஜ்குமாரை இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆகவே பாதிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு மோசடி மன்னன் ராஜ்குமாரை கைது செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் எவ்வளவு தொகை பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தனித்தனி நபர்களாக ஆதாரங்களுடன் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டனர். குறிப்பாக கடந்த ஓராண்டாக வட மாவட்டங்களை குறிவைத்து பல்வேறு நிதி நிறுவனங்கள் ஏழை எளிய மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.