திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி ஒரே இரவில் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு சாலை, கலசபாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் இயந்திரங்களை கேஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை வெட்டி எடுத்து அதில் இருந்த 72 லட்சத்து 79 ஆயிரம் கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள பொதுமக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் , திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் , ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி ஆகியோரின் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டதில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்த 6-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் தீவர விசராணையில் ஈடுப்பட்டனர். அப்போது கொள்ளையர்கள் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து குற்றம் நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இதுவரை இவ்வழக்கில் 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருந்தனர். இதில் ஈடுபட்ட அனைவரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்ய திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான அரியானா மாநிலம் மேவாத் மாவட்டம் பாதஸ் கிராமத்தை சேர்ந்த ஆசீப்ஜாவேத் வயது (30) என்பவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
அவர் நேரடியாக இந்த கொள்ளையில் ஈடுபட்டிருந்தார். அவரை பிடிக்க டெல்லி மற்றும் அரியானா பகுதிகளில் தனிப்படையினர் முகாமிட்டிருந்தனர். நேற்று முன்தினம் அரியானா- ராஜஸ்தான் எல்லைப்பகுதியில் தவுரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆரவல்லி மலைப்பகுதியில் பாழடைந்த கட்டிடத்தில் ஆசீப்ஜாவேத் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
அவர் ஆபத்தானவர் என்பதால் தனிப்படையினர் துணிச்சலுடன் செயல்பட்டு அங்கு சென்றனர். ஆசீப்ஜாவேத்தை தனிப்படயினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை தனிப்பட்டையினர் மேவாட் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விமானம் மூலம் தமிழகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை காவல்துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 20 லட்சத்தையும், 3 கார்கள் மற்றும் ஒரு கண்டெய்னர் லாரியையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். மேலும் இக்குழுவின் துணிகரமான செயலை பாராட்டி காவல் துறை டி.ஜி.பி.சைலேந்திர பாபு 1 லட்சம் வெகுமதி அறிவித்து உள்ளார்.