தமிழகத்தின் பல மாவட்டங்களில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.மேலும் இன்று தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை போன்ற 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பொழிந்து வருகிறது. இதனால் திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் நல்லவன்பாளையம், தேனிமலை, அடி அண்ணாமலை, ஏந்தல் உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்டார பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.நகரில் பல்வேறு தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.



இந்நிலையில் திருவண்ணாமலை நகரை ஒட்டி உள்ள வனதுர்க்கையம்மன் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. கனமழை காரணமாக திருவண்ணாமலை தாமரை குளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் வெள்ளை நீருடன் நகரில் உள்ள கழிவு நீர் அனைத்தும் ஒருங்கிணைந்து வனதுர்க்கை நகரில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பை சுற்றி வளைத்தது. அதேபோன்று தாமரை நகர், அரசு ஊழியர்கள் குடியிருப்பு என பல்வேறு இடங்களை மழைநீர் சுற்றி வளைத்தது.


முழங்கால் அளவிற்கு குடியிருப்புகள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.வெள்ளப்பெருக்கின் காரணமாக வனதுர்க்கை அம்மன் நகரில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசியமான பால் உள்ளிட்ட மளிகை பொருட்களை வாங்க கூட வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டுள்ளனர்.




 


இதுகுறித்து குடியிருப்புவாசிகள் தெரிவிக்கையில்; தற்போது போன்ற பொழிந்து வரும் மழைக்காலங்களில் தாங்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதாகவும், கன மழை பொழியும் போது எல்லாம் மழை நீருடன் சேர்ந்து பாம்பு, பல்லி, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் நுழைவதால் குழந்தைகளை வைத்துக்கொண்டு அச்சத்துடன் தாங்கள் வசித்து வருவதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறினர்.மேலும் குடியிருப்பு வாசிகள் இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், மாவட்ட ஆட்சியரிடம் மனுகளும் அளித்துள்ளோம் என்றனர். ஆனால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் குடியிருப்புவாசிகளே ஒருங்கிணைந்து தங்களது சொந்த செலவில் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


திருவண்ணாமலை நகரில் இருந்து கழிவு நீர் வெளியேறக்கூடிய கால்வாயை பெரிய கால்வாயாக அமைத்து தர வேண்டும், தாமரை குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் கால்வாயை அகலப்படுத்தி தூர்வாரி சரி செய்து தங்கள் குடியிருப்புக்குள் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்தனர்.