தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று திருவண்ணாமலைக்கு வருகை தருகிறார். காலை சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வருகிறார். முதல்வருக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் உள்ள ஆராஞ்சி கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலையில் திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பெரியத் தெருவில் பழைய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள சிவாச்சாரியார்களுக்கு ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்குகொள்கிறார். அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை வேலூர் செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் மற்றும் வெண்கலத்தில் செய்யப்பட்ட கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் ஈசான்ய மைதானத்தில் நடைபெறும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இந்நிகழ்சிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்குகிறார்.
பின்னர் நாளை ( சனிக்கிழமை) திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சுமார் 1,103 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேருரையாற்றுகிறார். மேலும் 1 லட்சத்து 67 ஆயிரம் பயனாளிகளை தேர்வு செய்யப்பட்டு 674 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும், 429 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் பந்தலில் சுமார் 15 ஆயிரம் பயனாளிகள் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 15 ஆயிரம் பயனாளிகள் அமரும் வகையில் மிகவும் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
விழா முடிந்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். அமைச்சர் வருகையை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அனைத்து பணிகளையும் முன்னின்று ஆய்வு செய்து கண்காணித்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்கள் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் ஒரு ஐஜி , 3 டிஐஜி, என 7 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட 2600 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்