இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற வியாழக்கிழமை தொடங்க உள்ளது. சென்னையில் வரும் 28ம் தேதி தொடங்கும் இந்த போட்டியை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஜோதி பேரணி பல்வேறு மாவட்டங்களில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கோயம்புத்தூரில் இருந்து ஒலிம்பியாட் ஜோதி நேற்று இரவு புறப்பட்டு இன்று காலை திருவண்ணாமலை வந்தடைந்தது. கொட்டும் மழையில் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஜோதி பேரணியை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பெரியார் சிலை அருகே தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சி திருவண்ணாமலை முக்கிய வீதிகளான அண்ணா சிலை, காந்தி சிலை, ராஜகோபுரம், கல்லக்கடை சந்திப்பு, பெரிய தெரு, சின்னக்கடை வீதி பேருந்து நிலையம் உள்ளிட்ட 11 முக்கிய இடங்களில் தொடர் ஜோதியானது கொண்டுவரப்பட்டு போளூர் ரோட்டில் அமைந்துள்ள ஈசானிய மைதானத்தில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. கொட்டும் மழையில் வழி நெடுகிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஜோதியை உற்சாகமாக வரவேற்றனர். போளூர் சாலையில் உள்ள ஈசானிய மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள், அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையிலும் பேரணியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் காலையிலேயே பள்ளி மாணவர்களை அழைத்து வந்த மாவட்ட நிர்வாகம் மாணவர்கள் அனைவரையும் கொட்டும் மழையை கூட பொருட்படுத்தாமல் அவர்களை மழையில் நனைந்தபடியே முக்கிய சாலையில் பேரணியாக அழைத்து சென்றனர். அதன் பிறகு மாணவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. ஆனால் அந்த உணவுகளை மாணவர்கள் அங்கேயே சாப்பிட ஏற்பாடு செய்யப்படவில்லை, மாணவர்கள் அனைவரும் உணவை வாங்கிகொண்டு மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றனர். மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சென்று விடகூட அவர்களுக்கு வாகனங்கள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை, மாணவர்கள் அனைவரும் கையில் உணவு பொட்டலங்களை ஏந்திக்கொண்டு பள்ளிக்கு நடந்தே சென்று உணவுகளை சாப்பிட்டனர்.
மேலும், மாரத்தானில் கலந்துகொண்ட அமைச்சர், அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் அனைவரும் மழையில் நனையாமல் இருக்க குடைகளுடன் நின்றதும் மாணவர்கள் மழையில் நனைந்து கொண்டு நின்றதும் கண்ட பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்