பந்தல் அமைத்த வாடகையைத் தராமல் இழுத்தடித்த ஜோலார்பேட்டை காவல்துறையினர் மீது அவர்களின் காவல் நிலையத்துக்கே சென்று பந்தல்கடை உரிமையாளர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் .
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கைதுசெய்யப்பட்ட பேரறிவாளன், 30 ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்.
புழல் சிறையில் தற்பொழுது தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு மருத்துவகாரணங்கள் அடிப்படையில் 30 நாட்கள் பொது விடுப்பு வழங்கவேண்டும் என்றும் அவரது தாயார் அற்புதம்மாள் தமிழ் நாடு முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார் .
இதன் அடிப்படையில் கடந்த மே மாதம் 28 ஆம் தேதி 30 பரோலில் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு வந்த பேரறிவாளனின் பரோல் மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு செய்ய பட்டுள்ளது . பாதுகாப்புக் காரணங்களுக்காகப் அங்கே காவலுக்கு இருக்கும் போலீசாருக்கு பேரறிவாளன் வீட்டின் எதிரே பந்தல் அமைப்பது வழக்கம் .
இந்நிலையில் கடந்த மே மாதம் 28 ஆம் தேதி பேரறிவாளன் வீட்டின் எதிரே புதூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் (வயது 52 ) என்பவர் பந்தல் அமைத்து மின் விளக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
இதற்கான, வாடகைப் பணத்தை போலீஸாரே 10 நாட்களுக்கு ஒருமுறை தருவதாகக் கூறி இருந்தார்களாம் . ஐம்பது நாட்களைக் கடந்தும் போலீஸ் வாக்களித்ததுபோல் வாடகை பணம் தரவில்லை என்று மனமுடைந்த பந்தல் அமைப்பாளர் சம்பத், ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கே சென்று அங்குப் பணிபுரியும் போலீஸார் மீதே புகாரளித்துள்ளார்.
அவரின் புகார் மனுவில், ‘‘கடந்த மே மாதம் 28-ஆம் தேதி முதல் பேரறிவாளன் வீட்டின் முன்பு நான்குப் பந்தல், நாற்காலிகள் மற்றும் மின்விளக்கு வசதி அமைத்துக் கொடுத்துள்ளேன். நேற்று வரை அதற்கான வாடகை 45,000 ரூபாய் ஆகிறது. ஆனால், போலீஸார் 11,000 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர். மீதித் தொகையை எப்போது தருவீர்கள்?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார் சம்பத். தங்கள் மீதான புகார் என்பதால் முதலில் சம்பத்திடமிருந்து மனுவை வாங்க மறுத்த போலீஸார், அவரை சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர் .
இது தொடர்பாக ABP நாடு செய்தி குழுமத்திடம் பேசிய காவல் துறை அதிகாரி ஒருவர் , பேரறிவாளனின் பாதுகாப்புக்கு உள்ள போலீசார் வசதிக்காக இந்த பந்தல் அமைக்கப்பட்டது . 30 நாளில் பேரறிவாளனின் பரோல் முடிந்துவிடும் என்று எதிர்ப்பதும் அனால் மேலும் ஒரு மாதம் அவரது பரோல் நீடிக்கப்பட்டுவிட்டது . பில்கள் பாஸ் செய்யப்பட்டு, அரசு கருவூலம் மூலம் பணம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் , பந்தல்காரர் சம்பத்தின் முழு பாக்கியும் வர ஜூலை 28 ஆம் தேதி , பேரறிவாளன் பரோல் முடியும் நாள் அன்று சம்பத்தின் நிலுவை தொகை அனைத்தும் செட்டில் செய்ய படும் என்று தெரிவித்தார் .