ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் முருகா ரெட்டி தெருவை சேர்ந்தவர் சரவணன். மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுஜாதா (வயது 45). இவருடைய உறவினர் சென்னையைச் சேர்ந்த மூர்த்தியின் மனைவி சிவபூஷணம் (வயது 67). இவர்கள் இருவரும் குடியாத்தம் அருகே ரோஸ் பேட்டையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக சோளிங்கர் பஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் வந்தனர். பஸ் நிலையத்திற்கு வெளியே பேருந்துக்காக காத்திருந்த இவர்களிடம் சிவப்பு நிற காரில் வந்த ஒருவர் எங்கு செல்கிறீர்கள்? என கேட்டுள்ளார்.
அப்போது சுஜாதா குடியாத்தம் குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக காத்திருக்கின்றோம் என்று பதிலளித்துள்ளார் உடனே அந்த அடையாளம் தெரியாத டிரைவர் நான் பள்ளிகொண்டா தாண்டி செல்கிறேன். பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தங்களை இறக்கி விடுகிறேன். அங்கிருந்து குடியாத்தத்துக்கு எளிதாக நீங்கள் செல்லலாம். எனக்கு ரூ.150 கொடுத்தால் போதும் என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பி சுஜாதாவும், சிவபூஷணமும் காரில் எறியுள்ளனர் .
சோளிங்கரில் இருந்து வாலாஜா, வேலூர் வழியாக பள்ளிகொண்டா நோக்கி கார் சென்றது. வேலூர் நகர எல்லையை தாண்டிய பின்னர் திடீரென அந்த அடையாளம் தெரியாத கார் டிரைவர் ஒருகையில் காரை ஓட்டிக்கொண்டே சிவபூஷணத்தின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறித்தார். இதனால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் சுஜாதாவின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியையும் பறிக்க முயன்றார். ஆனால் அவர் அதை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நகையை பாதுகாக்க போராடினார். இருவரும் காரில் இருந்தபடியே தங்களுக்கு உதவுமாறு காரின் ஜன்னல்களை தட்டி கூச்சலிட்டுள்ளனர் .
பள்ளிகொண்டா சுங்கச்சாவடிக்கு சென்றால் எளிதில் மாட்டிக்கொள்வோம் என்று கருதிய அந்த கொள்ளையன் , காரை திருப்பி மீண்டும் நெடுஞ்சாலையிலேயே வேலூர் நோக்கி வந்தார். காரில் வந்து கொண்டிருந்தபோது சுஜாதா, சிவபூஷணம் இருவரிடமும் கழுத்தில், கைகளில் உள்ள அனைத்து நகைகளையும் கொடுத்து விடுங்கள் ! இல்லை என்றால் இருவரையும் காரிலேயே கொலை செய்து நகையை பறித்துவிடுவேன்!! என்று அச்சுறுத்தியுள்ளான் . இதனால் இருவரும் செய்வதறியாது திகைத்தனர்.
அப்போது காரை ஓட்டியவாறே சிவபூஷணத்தை தாக்கி அவரது கைகளில் அணிதிருந்த வளையல்களை பறித்தான் . இதற்கிடையே கார் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்திற்கு வந்தது. சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் இடத்தில் ராட்சத டிரெய்லர் லாரிகள் நின்று கொண்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து சென்றது. இதனை போக்குவரத்து போலீசார் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அவர்களை கண்டதும் சுதாரித்துக்கொண்ட டிரைவர் எப்படி தப்பிப்பது என யோசித்தபடியே காரை மெதுவாக ஓட்டி வந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுஜாதா காரின் கதவைத் திறந்து கொண்டு வெளியே குதித்தார். சாலையில் உருண்டு விழுந்து அவர் அலறி கூச்சலிட்டார். அந்த நேரத்தில் காரில் இருந்த சிவபூஷணமும் கைகளை வெளியே நீட்டி பொதுமக்களிடம் உதவி கேட்டார். இதனால் அந்த டிரைவர் சிவபூஷணத்தை ஓடும் காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டு காரை ஓட்டினார்.
இருவரும் காரில் இருந்து விழுந்ததை பார்த்த அக்கம்பக்கத்தில் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடிவந்தனர். உடனடியாக அங்கிருந்த போக்குவரத்து போலீசார் காரை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர். அனால் காரை மின்னல் வேகத்தில் ஓட்டி தப்பித்துக்கொண்டான் அந்த கொள்ளையன் .
காரில் இருந்து விழுந்த 2 பெண்களுக்கும் தலை, கை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இருவரையும் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் காரில் வந்த மர்ம நபர் லிப்ட் கொடுப்பது போல நடித்து, தங்களை தாக்கிவிட்டு 10 பவுன் நகைகளை பறித்து சென்றுவிட்டதாக இருவரும் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.