கொரோனா காலகட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதென்றால் அது குழந்தைகளின் கல்வி என்று தமிழகத்தின் அனைத்து பெற்றோர்மார்களும் கூறுவார்கள். ஆனாலும் அரசுகள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அதனிடைய தமிழகத்தில் தேர்தல் வந்து திமுக ஆட்சி அமைத்து கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவியேற்றார். பதவியேற்றது முதலே பெரும் சவால்கள் காத்திருந்த நிலையில், ஆரம்ப கலகட்டங்களில் கண்டிப்பாக பள்ளியை திறப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தது. பின்னர் வீட்டில் இருந்து கல்வியை அதே தரத்தோடு கிடைக்க செய்யும் பணியில் இன்றுவரை ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு வழியாக கொரோனா குறைந்த நிலையில் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் இயங்கி வருகின்றன.



இந்நிலையில் அரக்கோணத்தில் புனித பேதுரு ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். தென்னிந்திய திருச்சபை நடத்தும் ஆறாம் ஆண்டு நலிந்தோருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேராயர் ஜார்ஜ் தலைமையில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அங்கு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "நான் பள்ளிக்கு மேற்பார்வைக்கு செல்லும்போது அங்குள்ள குழந்தைகளிடம் சென்று 'நான் யார்?' என்று கேட்பேன். அதற்கு அவர்கள் 'கல்வி அமைச்சர்' என்று பதில் சொல்லுவார்கள். நான் 'இல்லை நான் இந்த ஸ்கூல் வாட்ச்மேன், ஸ்கூல் எப்ப திறக்கணும், எப்ப மூடனும்ன்னு நாங்க தான் முடிவு பண்றோம். நீங்க ஸ்கூலுக்கு வரணும்ன்னு சொன்னா, அது முழு பாதுகாப்போட இருக்குன்னு அர்த்தம்' என்று சொல்வேன்" என்று கூறியதும் அங்கு கூடியிருந்த மக்கள் கைகளை தட்டினர். மக்களோடு மக்களாக, மக்களுக்கு சேவை புரியும் ஆட்சி தமிழகத்தில் நடைபெருகிறதென்று அதனை மேலும் விளக்கினார். பின்னர் நிகழ்ச்சியில் நலிந்தோருக்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.



கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டது என்பதும், முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த இந்த திட்டம் தற்போது நல்லமுறையில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் உள்ள இந்த இல்லம் தேடி கல்வித் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஜனவரி மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.