வேலூர் மாநகர திமுக மற்றும் வேலூர் சட்டமன்ற தொகுதி சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கலைஞர் நூற்றாண்டு விழா பொது கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார். மேலும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் பா.கார்த்திகேயன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி.நந்தகுமார், வேலூர் மேயர் சுஜாதா மற்றும் துணை மேயர் சுனில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், “காமராஜர் பிரதமர் ஆவதை நாங்கள் தடுத்து விட்டோம் என பாஜகவினர் கூறுகிறார்கள். காமராஜருக்கு திமுக காரர்கள் செய்தது போல காங்கிரஸ்காரர்கள் கூட செய்திருக்க மாட்டார்கள். காமராஜருக்காகதான் பதவியில் இருந்தவர் கலைஞர் என்பதை அமித்ஷா போன்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். காமராஜர் இறந்த பிறகு அவரது உடலை நல்லடக்கம் செய்வது குறித்து தலைவர் கலைஞர், காங்கிரஸ் கட்சியினரை அழைத்து பேசினார். அப்போது ஒவ்வொரு கோஷ்டி ஒவ்வொரு கருத்தை முன் வைத்தார்கள். ஆனால் காமராஜர் உடலை அரசு மரியாதையோடு ராஜாஜி ஹாலில் வைத்து காந்தி மண்டபத்தில் அடக்கம் செய்தவர் கலைஞர்.


 




 


காமராஜரை பற்றி பேச அமித்ஷாவுக்கு தகுதி இல்லை. ஆனால் எனக்கு உண்டு. ஏன்னா நான் அப்போது 10 வது படித்து வந்தேன் அமித்ஷா ஒரு கை குழந்தை. காமராஜர் பிரதமர் ஆவதை நாங்கள் தான் தடுத்ததாக வேலூரில் ஒருவர் கூறிவிட்டு உதை வாங்காமல் சென்றிருக்கின்றார் என்றால் அது எவ்வளவு பெரிய ஆச்சரியம். அமித்ஷா கயிறு திரித்துவிட்டு போகிறார். வேலூர் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், 2ஜி 3ஜி 4ஜி என பேசி இருக்கிறார். ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். எந்த ஜியாலும் எங்கள் கால் செருப்பில் உள்ளை தூசியை கூட தொட முடியாது. 2 ஜியில் உங்களால் நிரூபிக்க முடிந்ததா? நீதிமன்றமே உங்களை திட்டியது. திமுகவுக்கு ஓட்டு போட்டால் கருணாநிதியின் பிள்ளையும், பேரனும்தான் வாழ முடியும் என குடும்ப அரசியல் குறித்து மோடி பேசியுள்ளார். மோடி எங்களை பற்றியும், குடும்ப அரசியல் பற்றியும் பேசிக்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏன்னா எங்களை பார்த்து குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என கூறியவர்கள் போய் சேர்ந்துவிட்டார்கள். அந்த நிலை உங்களுக்கு வேண்டாம்.




 


சட்டமன்ற உறுப்பினர்களால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுபவர் யாரை அமைச்சராக நியமிக்கிறாரோ அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது மட்டும்தான் ஆளுநரின் வேலை. ஒரு மந்திரி சபையில் ஆளை சேர்ப்பதும், நீக்குவதும் ஒரு மாநில முதல்வர் பணி, ஆனால் இன்றைக்கு அதிகபிரசிங்கத்தனமாக ஆளுநர் ரவி செந்தில் பாலாஜியை நீக்கியிருக்கிறார். செந்தில்பாலாஜி வழக்கு எப்போது போடப்பட்டது. இத்தனை காலம் நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க. உயர்நீதிமன்றம் முடித்து வைத்ததை செந்தில் பாலாஜி தப்பு பண்ணதாக ஆளுநர் சொல்கிறார். வாய்கொழுப்பால்தான் ஜெயலலிதா  நான் போட்ட வழக்கால் டான்சி புகாரில் உள்ளே போனார் ஜெயலலிதா” என்று பேசினார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.