ஆம்பூர் அருகே ஆர்டர் செய்த உணவு தாமதமாக வந்ததால் உணவகத்தை அடித்து நொறுக்கி உணவக ஊழியர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். அவர்கள் சென்னா மசாலா ஆர்டர் செய்திருந்ததாகவும், அதனை உணவகத்தில் கொடுக்க தாமதமானதால், ஒட்டுமொத்த தாபாவையும் அடித்து நொறுக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.



திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குளிதிகை பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த 53 வயது ஆகும் முகமது யூனிஸ் என்பவர் தாபா உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பிற்பகல் 1.45 மணிக்கு மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் மதிய உணவு சாப்பிட வந்தனர். உணவக ஊழியர்களிடம் உணவு ஆர்டர் செய்தனர். ஆர்டர் செய்த உணவு வகைகள் உடனடியாக கொடுக்க வேண்டும் எனக்கூறி உள்ளனர். எல்லா உணவும் அவர்கள் கேட்டபடியே முடிந்த அளவுக்கு சீக்கிரம் வந்துள்ளது.


ஆனால், சன்னா மசாலா மட்டும் வர தாமதமானதால், ஆத்திரமடைந்த அவர்கள் உணவக ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர். அவர்கள் கொஞ்சம் பொறுங்கள் வரும் என்று மரியாதையாக கூறியும் மதிக்காமல் அடாவடி செய்யத்துவங்கியுள்ளனர். வந்திருந்த 6 பேரும் ஒன்று சேர்ந்து, உணவகத்தில் இருந்த, மேஜை, நாற்காலி, சமையல் பொருட்கள் அங்கிருந்த சிசிடிவி கேமரா உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளனர்.



இதனை அந்த உணவகத்தில் வேலை செய்யும் நபர்கள் தடுக்க முயற்சித்துள்ளனர். ரவுடி கும்பல் ஊழியர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இவ்வளவு செய்த அந்த ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பியோடினர். நடந்த இந்த சம்பவத்தில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. அடித்து உடைத்தது மட்டுமின்றி, கல்லாவில் இருந்த 10 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அது போதாது என்று பார்சல் செய்து வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட சிக்கன், மட்டன் பிரியாணி பொட்டலங்களை எடுத்துக் கொண்டு தப்பி உள்ளனர்.


வெறும் 40 ரூபாய் சன்னா மசாலாவுக்காக ஒரு கடையையே அடித்து நொறுக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆம்பூர் கிராம காவல் நிலையத்தில் உணவக உரிமையாளர் முகமது யூனிஸ் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதன் பின்னர் உணவக கேமராவில் பதிவான காட்சிகளை வாங்கிக்கொண்டு, அதனை வைத்து தகராறில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து கண்டுபிடிக்க முயற்சித்தனர். அதன்மூலம் காரில் வந்து தாபாவை அடித்து நொறுக்கியது, வேலுாரை சேர்ந்த ரவுடி கும்பல் என, தெரிந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.