குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தி இரண்டு மாணவிகள் உயிரிழக்க காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஆம்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் வர்ஷா ஶ்ரீ, ஜெயா ஶ்ரீ என்ற இரு மகள்களுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி காலை ஆம்பூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் மகள்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்று கொண்டிருந்த தண்டபாணியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த அவரது இரு மகள்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்., படுகாயமடைந்த தந்தை தண்டபாணியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஆம்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், விபத்து நடைபெற்ற போது, லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் ஜார்ஜ் ஜெயசீலன் என்பவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து குடிபோதையில் கன்டெய்னர் லாரியை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ஜார்ஜ் ஜெயசீலன் என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 அபராதம் விதித்து ஆம்பூர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
படுகாயம் அடைந்த தண்டபாணி தனது மகள்கள் இறப்புக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டாம். ஆனால் குடிபோதையில் வாகனம் இயக்கினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என கடுமையான சட்டத்தை இயற்றிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.