ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் தனியார் செருப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் உள்பட பலரும் இந்த தொழிற்சாலையில் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்காக ஆலையில் இருந்து வேன் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், தொழிற்சாலைக்கு வாணியம்பாடி நெக்குந்தி பகுதியில் இருந்து 20க்கும் மேற்ப்பட்ட பெண் தொழிலாளர்கள் ஏற்றிக்கொண்டு ஆம்பூர் நோக்கி தொழிற்சாலை வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது, சோலூர் பகுதி அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை வேன் இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு எதிர்திசைக்கு சென்றது.
எதிர்திசையில் சுண்ணாம்பு மூட்டை ஏற்றி வந்த லாரியின் மீது வேன் பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் பெண் தொழிலாளர்கள் 3 பேர் உட்பட வேனில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்தவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்