தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகர் வடிவேலு நடித்த காமெடி கட்சிகள் எப்போதும் வைரலாகும். அந்தவகையில் மருதமலை படத்தில் இருக்கும் காமெடி ஒன்று மிகவும் வைரலானது. அந்த காட்சியில் நடிகை ஒருவர் 4 பேரை திருமணம் செய்துவிட்டு 5-வது நபரை திருமணம் செய்ய காவல் நிலையத்திற்கு வருவார். அப்போது அவர்களின் பெயரை எழுதி வடிவேலு குலுக்கல் முறை செய்வார். அந்த காமெடி பலரின் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அந்த காமெடி காட்சியை போல் ஒரு உண்மை சம்பவம் நடைபெற்றுள்ளது. அதன்படி ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் 4 பேரை திருமணம் செய்த பிறகு 5-வதாக ஒரு நபரை திருமணம் செய்ய முயன்ற போது சிக்கியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆம்பூர் அருகே கஸ்பாவைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா(35). இவர் முதலில் கரும்புரைச் சேர்ந்த மூர்த்தி(40) என்பவரை திருமணம் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து கஸ்பா பகுதியைச் சேர்ந்த கஸ்பா பாபு(39) என்பவரையும் திருமணம் செய்துள்ளார். மேலும் சண்முகசுந்தரம்(43), அசோகன்(42) ஆகியோரையும் இவர் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த திருமணங்கள் தொடர்பாக மற்ற கணவர்களுக்கு தெரியாமல் இவர் நடந்து கொண்டதாக தெரிகிறது. மேலும் இந்த ஒவ்வொருவரிடம் இருந்து சுமார் 10 சவரன் நகை மற்றும் தலா 2 லட்சம் ரூபாய் ஆகியவற்றை ஐஸ்வர்யா பெற்று கொண்டதாக தெரிகிறது. இந்தச் சூழலில் ஐந்தாவதாக மாதனூரைச் சேர்ந்த ராமமூர்த்தி(36) என்பவரை திருமணம் செய்ய முயன்றுள்ளார். அப்போது ஐஸ்வர்யாவின் திருமணம் தொடர்பாக இந்த நான்கு பேருக்கும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் நான்கு பேரும் தனித்தனியாக ஐஸ்வர்யா மீது புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் நான்கு பேரையும் திருமணம் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து இந்த நான்கு பேரும் தங்களிடம் இருந்து பெற்ற நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருப்பி கொடுத்தால் போதும் என்று தெரிவித்துள்ளனர். அதற்கு ஐஸ்வர்யா சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அவர்களிடன் நகை மற்றும் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு ஐந்தாவது நபரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளதாக தெரிகிறது. இதற்கு நான்கு கணவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். அது தொடர்பாக அவரிடம் எழுதி வாங்கிவிட்டு காவல்துறையினர் அப்பெண்ணை விடுவித்துள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத்தில் வரும் காமெடி காட்சி தற்போது உண்மையில் நடைபெற்றுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.