தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் கடலை மிட்டாய் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. சோதனை முறையில் 15 நாள்கள் விற்பனை செய்யப்படுகிறது.




ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷன்களிலும் அந்தந்த ஊர்களைச் சார்ந்த பாரம்பரியமிக்க உணவு படங்களை விற்பனை செய்வதற்கு, " ஒன் ஸ்டேஷன் ஒன் புராடக்ட் " எனும் திட்டத்தின் கீழ், ரயில்வே நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனில், புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயை விற்பனை செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது.




இதையடுத்து, கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் தனியார் கடலை மிட்டாய் விற்பனை கடை மூலம் கடலை மிட்டாய் விற்பனை செய்வதற்கு கடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, கடலை மிட்டாய் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் நலச் சங்க செயலாளர் கண்ணன், விற்பனை நிலைய உரிமையாளர்கள் மாரிச்சாமி, மணிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




இதுகுறித்து, கடலை மிட்டாய் உற்பத்தியளர்கள் சங்க செயலாளர் கண்ணன் கூறுகையில், கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்த பின் கடலை மிட்டாய்க்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. அண்மையில், தபால் நிலையங்கள் மூலம் கடலை மிட்டாய் விற்பனை செய்யப்படும் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது, ரயில்வே ஸ்டேஷனில் கடலை மிட்டாய் விற்பனை துவங்கியுள்ளது. இதன் மூலம், கடலை மிட்டாய் விற்பனை மேலும் அதிகரிக்கும்.




ரயில்கள் மூலம் கோவில்பட்டிக்கு வரும் பயணிகளும், கோவில்பட்டியில் இருந்து வெளியூர் செல்பவர்களும் கடலை மி்ட்டாய் வாங்குவதற்காக பஸ் ஸ்டாண்ட் பகுதி மற்றும் மார்க்கெட் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது பொதுமக்கள், கோவில்பட்டி கடலை மிட்டாயை ரயில்வே ஸ்டேஷனிலேயே வாங்கிக் கொள்ளலாம். மேலும், கோவில்பட்டி வழியாக செல்லக் கூடிய பயணிகளும், கோவில்பட்டி கடலை மிட்டாயை ரயில்வே ஸ்டேஷனிலேயே வாங்கிக் கொண்டு செல்லலாம் என்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண