திருவண்ணாமலை மாவட்டம் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி நிர்வாகத்திற்கான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், கலசபாக்கம், செங்கம், வந்தவாசி, செய்யாறு, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர், சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை ஆகிய 10 தொகுதிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள்,


 




திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 4 தொகுதிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 20 பேரூராட்சி, 9 நகராட்சி தலைவர்கள், அரசு துறை அதிகாரிகள், ஆணையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் உள்ள குடிநீர், கழிப்பிடம், சாலை வசதி, தெரு விளக்குகள் அமைத்தல், குப்பைகளை அள்ளுதல் மற்றும் பராமரித்தல், பேருந்து நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து துறை அமைச்சரிடம் நேரடியாக விரிவாக விவரித்தனர். அதனைக் கேட்ட துறை அமைச்சர் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதிகள் குறித்தும் தற்பொழுது உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறிய கோரிக்கைகள் குறித்தும் தீவிரமாக ஆலோசித்து கூட்டத்திலேயே பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி தரப்படும் என்றும் உத்திரவாதம் அளித்தார்.


 




 


 செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்; 


தமிழக முதல்வரின் அனுமதியோடு திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது மூன்று மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளதாகவும், இதற்குண்டான நிதியை அனைத்து துறைகளுக்கும் விரைந்து வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்வார் என்றும், திருவண்ணாமலை மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் வேண்டும் என தமிழக முதல்வரிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது அதற்காக 9600 கோடி ரூபாயில் திட்ட முறைக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூறியவர் திட்ட அறிக்கை முடிந்தவுடன் இந்த பணிக்கான ஒப்பந்தம் விடப்பட்டு விரைவில் பணிகள் தொடரும் எனவும் உறுதியளித்தார்.


 




 


தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் பருவமழை வர உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக அனைத்து வடிகால்களும் தூர்வாரி முறையாக இருப்பதாகவும் கூறியவர் புதிய இடங்களில் வாய்க்கால்கள் தோண்டப்பட்டு இருந்தால் உடனடியாக அவற்றையும் முறையாக பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.


திருவண்ணாமலை நகரத்திற்கு 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்ட டெண்டர் விடப்பட்டு உள்ளதாகவும் கூறிய அவர் தற்பொழுது பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் ஏதேனும் குறை இருந்தால் உடனடியாக ஆணையாளருக்கு அறிவுறுத்தி மக்களின் பாதுகாப்பு கருதி அந்த பேருந்து நிலையமும் செப்பனிட்டு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.