தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றது.  இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டமும் விதி விலக்கல்ல. திருவண்ணாமலை மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது.


பகல் முழுவதும் மழை மிதமான மழையும், இரவில் கனமழையும் வெளுத்து வாங்குகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக, செய்யாறில் 54.50 மிமீ மழை பதிவானது. ஆரணியில் 25.70 மிமீ, செங்கத்தில் 12.40 மிமீ, ஜமுனாமரத்தூரில் 18.80 மிமீ, வந்தவாசியில் 52.30 மிமீ, போளூரில் 15.70 மிமீ, திருவண்ணாமலையில் 14மிமீ, தண்டராம்பட்டில் 19 மிமீ, கலசபாக்கத்தில் 11 மிமீ, சேத்துப்பட்டில் 28.20 மிமீ, கீழ்பென்னாத்தூரில் 22.20 மிமீ, வெம்பாக்கத்தில் 52.20 மழை பதிவானது.



மேலும், சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,890 கனஅடி வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, 1,890 கன அடி தண்ணீரும், தென்பெண்ணை ஆற்றின் இடது, வலதுபுற கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 97.45 அடியாக உள்ளது. அதேபோன்று , குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 57.07 அடியாகவும், மிருகண்டா அணையின் நீர்மட்டம் 21.32 அடியாகவும், செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 56.51 அடியாகவும் தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சுமார் 1.82 லட்சம் திறந்தவெளி பாசன கிணறுகளும் முழுமையாக நிரம்பியுள்ளது. அதேபோன்று, மொத்தமுள்ள 1,984 ஏரிகளில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 335 ஏரிகள், ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான 322 ஏரிகள் உள்பட மொத்தம் 657 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பியிருக்கிறது. எனவே, இந்த ஏரிகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.




மேலும், பொதுப்பணித்துறையின் 70 ஏரிகள், ஊரக வளர்ச்சித்துறையின் 288 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் நிரம்பியிருக்கிறது. அடுத்த சில நாட்களில் கனமழையால் இந்த ஏரிகளும் முழுமையாக நிரம்பும் வாய்ப்பு உள்ளது. எனவே, மாட்டம் முழுவதும் ஏரிகளை கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஏரியின் கொள்ளவை எட்டியநிலையில் அதில் இருந்து உபரி தண்ணீர் அதிக அளவில் வெளியேறி வருகின்றது.


வெளியே செல்லக்கூடிய இந்த உபரிநீர் செல்லக்கூடிய கால்வாய்கள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் ஏரியின் உபரிநீர் குறிஞ்சி நகர் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.