மது போதையில் ஊர் பொதுமக்களிடம் தொடர்ந்து அடிதடியில் ஈடுபட்டு வந்து , குடும்பத்தாரின் மன நிம்மதியையும் சீர்குலைத்து வந்த  எனது மகனின் தலையைக் கருங்கல்லால் நசுக்கி கொலை செய்தேன் , ஆம்பூர் அருகே 57 வயது தாய் வாக்குமூலம் .

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (36), கட்டிடத் தொழிலாளி , இவர் மீது  ஊர் பொது மக்களிடம் தொடர்ந்து அடிதடியில் ஈடுபடுவது , பொது அமைதியை சீர்குலைப்பது, பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவிப்பது, உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.



 

இவருக்குத் திருமணமாகி கௌரி  என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.  வியாழன் இரவு  வீட்டின் வெளியிலிருந்த  திண்ணையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த சிவகுமார், வெள்ளிக்கிழமை காலையில் ரத்தவெள்ளத்தில் உயிர் இழந்த நிலையில் கிடந்துள்ளார். இதை கண்ட அவரது மனைவி கௌரி அதிர்ச்சியில் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த சிவகுமாரின் தாய் ராஜேஸ்வரி மற்றும் உயிரிழந்த சிவகுமாரின் குழந்தைகள் என அனைவருமே அவரது உடலைப் பார்த்துக் கதறி அழுதனர் .

 



 

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து, சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கை நேரில் விசாரிக்க சம்பவ இடத்துக்குத் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பி.சக்கரவர்த்தி, ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்டோரும் நேரில் வந்தனர். பின்னர் கொலை சம்பவம் குறித்து துப்பறிய மோப்ப நாய் ’சிம்பா’ வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. 



 

சம்பவ இடத்தில் எஸ்பி விசாரணை மேற்கொண்ட பொழுது சிவகுமாரைக் கல்லைக் கொண்டு தலையை நசுக்கி கொலை செய்யப்பட்டிருப்பதை  உறுதி செய்தாலும் கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிபி சக்கரவர்த்தி, அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினார். மேலும் கொலை செய்யப்பட்ட சிவகுமாரின் வீட்டின் அருகே ரத்தக்காயத்துடன்  ஒரு  கருங்கல் இருந்தது அதில் மாட்டுச்சாணமும் ஊற்றப்பட்டிருந்தது  போலீஸ் விசாரணையின்போது சிவக்குமாரின் தாய் ராஜேஸ்வரி (57) கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார் . 

 



 

மேலும் அவர் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் எனது மகன் சிவக்குமார் தினமும் மது  குடித்து விட்டு ஊர்மக்களிடம் சண்டை சச்சரவில் ஈடுபட்டுவந்த போலீஸ் நிலையம் வரை எங்கள் குடும்ப மானத்தை  காற்றில் பறக்க செய்தான். மேலும்  வீட்டுக்கு வந்த பின்னரும் என்னை ஒரு தாய் என்றும் பார்க்காமல் மனம் நோகும்படி அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டி மனம் நோகச் செய்து வந்தான். மேலும் அவனது மனைவியையும் சித்ரவதை செய்து வந்தான் இதனால் நான் மிகுந்த மன உளைச்சலிலிருந்து வந்தேன். அவன் தனியாகத் தூங்கும்போது தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்ய நீண்டநாட்களாக திட்டம் தீட்டி இருந்தேன்.

 

அதன்படி நேற்று எனது மகன்
  சிவக்குமார் வீட்டுத் திண்ணையில் தனியாகப் படுத்து தூங்கி கொண்டு இருந்தான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட நான் ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கி வந்து அவனின் தலையில் போட்டு நசுக்கிக் கொலை செய்தேன். மேலும் காவல்துறையிடம் சிக்கக் கூடாது என்று கொலை செய்யப் பயன்படுத்திய கல்லில் மாட்டுச்சாணம் கரைத்து ஊற்றிவிட்டு , மறுநாள் காலை  ஒன்றும் தெரியாதது போல் இருந்து விட்டேன். போலீசார் என்னை பிடித்து விட்டனர். என்று வாக்குமூலம் அளித்துள்ளார் .

 



 

நேற்று இரவு கைது செய்ய பட்ட ராஜேஸ்வரிடம் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .