திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1400 அடி மலை உள்ளது இந்த மலை உச்சியில் தவளகிரீஸ்வரர் கோயிலும், விநாயகர், அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர், அண்ணாமலையாரின் சந்நிதிகளும் அமைந்துள்ளன. திருக்கோயிலில் பிள்ளையார் கோயிலும் உள்ளது. இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பிள்ளையார் கோயிலின் கோபுரத்தை இடித்துள்ளனர். 

Continues below advertisement

இதையடுத்து தகவல் அறிந்த இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், பிள்ளையார் கோயில் கோபுரத்தை இடித்த அடையாளம் தெரியாத நபர்களை கைது செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்து வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வந்தவாசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோபுரத்தை இடித்த நபர்களை உடனடியாக கைது செய்ய ஆவண செய்யப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Continues below advertisement

 

தவளகிரீஸ்வரர் கோவிலின் சிறப்பு அம்சங்கள்.!

தவளகிரீஸ்வரர் கோயிலில் இரண்டு பழங்கால கல்வெட்டுகள் இங்கு உள்ளன. பல்லவ மன்னன் 3-ஆம் நந்திவர்மன் காலத்துக் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் எட்டாம் நூற்றாண்டின் பல்லவர்கள் காலத்தில் இந்தத் தலம் சிறப்பிடம் பெற்றிருந்ததாகத் தெரிகிறது. இதில் வெண்குன்றம் கிராமத்து சபை பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. ஒரு பக்கம் தெலுங்கு மொழியிலும், மறுபக்கம் சமஸ்கிருத மொழியிலும், பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டிலிருந்து விஜயநகரப் பேரரசர்கள் காலத்திலும் இத்தலம் சிறப்பாக விளங்கியதையும் திருப்பணிகள் நடந்தேறியதையும் அறிய முடிகிறது.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் திருக்கோவில் கார்த்திகை தீப திருவிழா நடைபெறுவதைப் போன்று தவளகிரீஸ்வரர் கோயிலும் கார்த்திகை தீபத் திருவிழாவன்று அதிகாலை 4 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பிறகு முருகப்பெருமான் மலையடிவாரத்தில் வழிபடப்படுவார்.

பின்னர் மலைக் கோயிலில் எழுந்தருளியுள்ள தவளகிரீசப் பெருமானுக்கும், ஆறுமுகப் பெருமானுக்கும் இதர மூர்த்திகளின் சிலைகளுக்கும் அபிஷேகம் நடைபெறும். அன்று மாலை 6 மணியளவில் தவளகிரி மீது திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். பெரிய இரும்பு கொப்பரை முழுவதும் நெய் நிரப்பி ஏற்றப்படும் இந்த தீபம் சுற்றுவட்டாரத்தில் 10 கி.மீ. தூரத்துக்குத் தெரியும். மூன்று நாட்கள் தொடர்ந்து எரியும் இந்த தீபத்தை தரிசிக்கிறார்கள் பக்தர்கள். இவ்வளவு சிறப்பு அம்சங்களைக் கொண்ட கோவிலின் கோபுரத்தை உடைத்த மர்ம நபர்களை காவல்துறையினர், அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவு ஆகிய வீடியோவை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விநாயகர் கோயில் கோபுரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இடித்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.