கடந்த மாதம் 31ஆம் தேதி தாராபுரத்தில் பரப்புரையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் இருவரும் பிரதமர் மோடியின் அழுத்தம் தாங்காமல் உயிரிழந்தனர் என்று பேசினார். அவரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், உதயநிதியின் பேச்சுக்கு சுஷ்மா ஸ்வராஜின் மகள் மறுப்பும் தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, பாஜகவின் புகார் மனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், முன்னாள் அமைச்சர்கள் குறித்து பரப்புரையில் பேசியது தொடர்பாக இன்று மாலை 5 மணிக்குள் உதயநிதி பதிலளிக்கக் கோரி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு உதயநிதி விளக்கம் அளித்து கடிதம் அனுப்பினார். அதில், ‘என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். தாராபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோரை குறித்து அவதூறாக பேசவில்லை. நான் பேசிய இரு வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது எனது இடைக்கால விளக்கம். முழு விளக்கத்தையும் அளிக்க கால அவகாசம் கொடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல விஷயங்கள் குறிப்பிட்டுள்ளார்.