புதுக்கோட்டை மாவட்டம்,  கந்தர்வகோட்டை அருகே உள்ள கொசுவபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சர்மிளா (வயது 22). சில ஆண்டுகளுக்கு முன்பு தாயார் இறந்து விட்டார். அதன் பின்னர் தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து சென்றுவிட்டார்.


இதனால் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட சர்மிளா 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு சென்னையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். மேலும் விடுமுறை நாட்களில் புதுக்கோட்டை தச்சாங்குறிச்சி பகுதியில் வசிக்கும் தனது தாய்மாமன் பிரபு வீட்டுக்கு வந்து செல்வார். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தச்சான்குறிச்சிக்கு வந்தார்.


பின்னர் தாய்மாமன் பிரபு வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தார். அதன் பின்னர் சென்னைக்கு புறப்பட்டுச் செல்ல ஆயத்தமானார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வல்லம் அருகே நாட்டாணி பகுதியில் வசிக்கும் பிரபுவின் மைத்துனர் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபு தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் பங்கேற்றார். அப்போது சர்மிளாவும் உடன் சென்றார்.




பின்னர் பிரபு வீடு திரும்பிய நிலையில் சர்மிளா நாட்டாணியில் தங்கியிருந்தார். நேற்று இரவு சர்மிளா தனது தாய் மாமன் பிரபுவிற்கு போன் செய்து தன்னை அழைத்து செல்லுமாறு கூறினர். அப்போது பிரபு பக்கத்து வீட்டை சேர்ந்த கருப்புசாமியுடன் மது அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்தார். அதிக மது போதையில் இருந்ததால் தனது நண்பர் கருப்புசாமியிடம் தங்கை மகளை அழைத்து வர சொல்லி தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து அனுப்பினார்.


பின்னர் கருப்புசாமி நாட்டாணி சென்று சர்மிளாவை அழைத்து கொண்டு தச்சான்குறிச்சி ஓட்டிச் சென்றார். வல்லம் அருகே சென்னம்பட்டி காட்டுப்பகுதிக்கு சென்றபோது மது போதையில் இருந்த கருப்புசாமியின் குணம் மாறியது. மோட்டார் சைக்கிளை காட்டுப்பகுதியில் சாலையோரம் திடீரென நிறுத்தினார். அப்போது சிறுநீர் கழிப்பதற்காக நிறுத்தி இருக்கலாம் என சர்மிளா கருதினார்.


ஆனால் எதிர்பாராத வகையில் கருப்புசாமி சர்மிளாவை அலேக்காக தூக்கிக்கொண்டு காட்டுப்பகுதிக்குள் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சர்மிளா கூச்சலிட்டார். ஆனால் கருப்பு சாமியின் மிருகப் பிடியிலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. பின்னர் சர்மிளாவை அவர் பாலியல் வன்கொடுமை செய்தார். 


பின்னர் போலீசில் தன்னை காட்டி கொடுத்து விடுவார் என கருதிய கருப்பசாமி அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இந்த நிலையில் வெகு நேரமாகியும் சர்மிளா திரும்பி வராததால் சந்தேகமடைந்த பிரபு, கருப்புசாமி செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.


அப்போது எதிர் முனையில் பேசிய கருப்புசாமி தன்னையும், சர்மிளாவையும் ஒரு கும்பல் தாக்கிவிட்டு, அவரை காட்டு பகுதிக்கு தூக்கி சென்றதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரபு, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார். பின்னர் கருப்புசாமியுடன் சேர்ந்து காட்டுப்பகுதிக்கு சென்று சர்மிளாவை தேடினார். அப்போது அங்கு சர்மிளா கொலை செய்யபட்டு  பிணமாக கிடப்பதை கண்டு நிலைகுலைந்தார். பின்னர் இது பற்றி வல்லம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.




இதனை தொடர்ந்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சர்மிளாவின் உடலை கைப்பற்றி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 


அதன் பின்னர் கருப்புசாமியிடம் உரிய முறையில் விசாரணை நடத்திய போது, சர்மிளாவை வன்புணர்வு செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் கந்தர்வகோட்டை மற்றும் தஞ்சாவூர் வல்லம் பகுதியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.