திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறை சார்பில் உலக மகளிர் தினவிழா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் தலைமை தாங்கினார். பதிவாளர் (பொறுப்பு) கணேசன் வரவேற்று பேசினார். விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி பேசியதாவது:- மருத்துவர்கள், விஞ்ஞானிகள், மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போது கூட எனக்கு பயம் இருக்காது.

 

ஆனால் மாணவர்கள் மத்தியில் பேசும்போது கொஞ்சம் பயம் உள்ளது. ஏனென்றால் இன்றைய மாணவர்கள் எங்களை விட அறிவாளிகளாக உள்ளனர். நமது நாடு ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாமும் அதே வேகத்தில் பயணிக்க வேண்டும். வாழ்க்கை பாதையில் எந்த தடைகள் இருந்தாலும் அதை காலால் தேய்த்து எறிந்து விட்டு முன்னேற்ற பாதையில் பெண்கள் செல்ல வேண்டும். அதற்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் மற்ற பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும். கடுமையாக உழைப்பதன் மூலம் தான் வாழ்க்கையில் வெற்றியின் இலக்கை அடைய முடியும். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அதை தூக்கி எறிந்து விட்டு கிடைக்கும் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு நல்வாழ்வை வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் மகளிரியல் துறை இயக்குனர் (பொறுப்பு) மற்றும் தலைவர் முருகேஸ்வரி நன்றி கூறினார்.

 



 

மேலும் விழாவில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் எழுத்தாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் உட்பட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் மருத்துவப் பணி, சமூகசேவை, சமூகப்பணி, தமிழ் இலக்கிய மேம்பாட்டுப்பணி, அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்துறை போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 9 பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பாலின சமத்துவ கலை விழா விருதுகள் வழங்கப்பட்டது. இதேபோல் திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி.ஐ. கல்லூரி மகளிரியல் துறை சார்பில் கடந்த 6-ஆம் தேதி முதல் நேற்று வரை மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிறைவு விழாவிற்கு கல்லூரி இயக்குனர் அகிலா தலைமை தாங்கினார்.

 

கல்லூரி பதிவாளர் தாமரைச்செல்வன், மகளிர் துறை தலைவர் சுப்பையா ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிர் தின விழாவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசும்போது, கணவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் 90 சதவீதம் பெண்கள் தங்களது சிறுநீரகத்தை கணவருக்கு தருவதற்கு முன்வருகின்றனர்.

 

ஆனால் அதுவே பெண்களுக்கு பாதிக்கப்பட்டால் ஆண்கள் வேறு பெண்ணை பார்த்துச் சென்று விடுவார்கள். இது புள்ளி விவரமாகவே பதிவாகியுள்ளது. ஆண்களுக்கும் தியாக உணர்வு வர வேண்டும். பெண்கள் பணம் சம்பாதிப்பதற்கு சுய தொழில் ஏதாவது செய்ய வேண்டும் என்றார்.

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண