புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எழில் நகரை சேர்ந்த ரமேசின் மனைவி தீப லட்சுமி (வயது 35). இவர் கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பண முதலீடு திட்டத்தில் சேர்ந்திருந்தார். இதில் அவருக்கு கமிஷன் தொகை வருமானமாக வந்துள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி மாலை தீப லட்சுமி விஷம் குடித்து மயங்கினார். வளாகத்தில் மயங்கி கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் தீபலட்சுமி நேற்று பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்த பெண் இறந்தது தொடர்பாக திருக்கோகர்ணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை தரப்பில் தெரிவித்தது.. தனியார் நிறுவன முதலீடு திட்டத்தில் தீப லட்சுமி ஏராளமான வாடிக்கையாளர்களை சேர்த்து விட்டுள்ளார். இதில் வாடிக்கையாளர்களுக்கு கமிஷன் தொகை எதுவும் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் பணம் முதலீடு செய்தவர்கள், தீபலட்சுமியிடம் தொடர்ந்து பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். அவர் தனியார் நிறுவனத்திடம் கமிஷன் தொகையை கேட்டிருக்கிறார். ஆனால் அவா்கள் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 


மேலும் இதனால் மன அழுத்ததிற்கு ஆளான தீப லட்சுமி என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்கு ஆடி நின்றார். தொடர்ந்து தனியார் நிறுவனத்திடம் சென்று என்னை நம்பி பணம் முதலீடு செய்தவர்களுக்கு இன்னும் சரியான கமிஷன் தொகை வழங்கபடவில்லை, ஆகையால் அந்த தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என தொடர்ந்து தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நிறுவனம் சரியான பதில் சொல்லாமலும், பணத்தை தராமலும் இழுக்கடித்தது எனவும் விசாரனையில் தகவல் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தீப லட்சுமியிடம் பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து கமிஷன் தொகை, அல்லது நாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்பி வழங்குமாறு தொடர்ந்து தொலைபேசி மூலமாகவும், நேரிலும் வந்து கேட்டுள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. மேலும் இதற்கிடையில் தனியார் நிறுவனத்தில் இருந்து உரிய கமிஷன் தொகையை தீபலட்சுமி மட்டும் பெற்றுவந்த நிலையில் தான் சேர்த்து விட்டவர்களுக்கு கமிஷன் தொகையை வழங்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.




இதனை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என காவல்துறையினர் தரப்பில் தகவல்  கூறினர்.


தனியார் நிறுவனத்தில் முதலீடு திட்டத்தில் பணம் வழங்காத நிலையில் விபரீதமாக முடிவு எடுத்து விஷம் குடித்து பெண் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பொதுமக்கள் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் தேவையில்லாமல் சில நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். பின்பு ஏமாற்றம் அடைந்துவிடுகிறார்கள். ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050