பிரபல யூடிபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை இழிவுப்படுத்தும் விதமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், திருச்சியில் ஒரு பெண் கூடுதல் காவல் கண்காணிப்பாளரே அவர் மீது புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


திருச்சி மாவட்ட காவல் துறை அறிக்கை


தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் பாலியல் ரீதியாக இணக்கம் வைத்துக்கொண்டு பணியில் நல்ல இடத்தை பெற்றுகொண்டு பணிபுரிந்து வருவதை போன்று ஆபாசமாகவும், அருவருக்கதக்க வகையிலும் தனியார் YouTube Channel- ல் சவுக்கு சங்கர் பேசியுள்ளார். சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு என்ற இருநபர்கள் தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களையும் பற்றி இழிவுபடுத்தி உள்நோக்கத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார்கள் என திருச்சி மாவட்ட காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 




”பெண் காவலர்கள் மன உளைச்சல்”


பெண் காவலர்கள் கடுமையான இன்னல்களுக்கு மத்தியில் காவல் துறையில் பணிபுரியும் சூழலில் மேற்கண்ட காணொளியின் காரணமாக பொது வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் பின்னடைவை சந்தித்து உள்ளனர். மேலும், நாட்டிலேயே பெண் காவலர்களை அதிகமாக உள்ளடக்கி முன்மாதிரியாக அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும், சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களிலும் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல் காவல் அதிகாரிகள் வரை அனைவரையும் இழிவுபடுத்தும் விதமாக இந்த காணொளி அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், சவுக்கு சங்கரின் இத்தகைய காணொளியினால் காவல் துறையிலும், பிற அரசு துறைகளிலும் பணிபுரியும் பெண்கள் அனைவரும் பதவி உயர்விற்காகவும், பணி இட மாறுதல்களுக்காகவும், பாலின ரீதியாக உயர் அதிகாரிகளிடம் சமரசம் செய்து கொள்வதாக கூறி ஒட்டுமொத்த பெண் இனத்தையே இழிவுபடுத்தியுள்ளார் என்று திருச்சி மாவட்ட காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சவுக்கு சங்கர் மீது பெண் காவலர்கள் புகார்


திருச்சி மாவட்டத்தில், நேரடியாக தேர்வு செய்யப்பட்டு, தற்போது முசிறி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் செல்வி. M.A. யாஸ்மின் அவர்கள், இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், மேற்படி காணொளியானது. சமுதாயத்தில் பல்வேறு துறைகளில், குறிப்பாக காவல் துறையில் பாலின சமத்துவ வேறுபாடின்றி சீரிய முறையில் பணிபுரிந்து வரும், பெண் காவலர்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாவட்டம் சைபர் கிரைம் . 21/24 U/s 294(b), 353, 509 IPC, 67 IT act and 4 of TN prohibition of harassment of women act பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும், மேற்படி குற்ற செயலுக்கு தூண்டுதலாக இருந்த பெலிக்ஸ் ஜெரால்டு என்பவர் இரண்டாம் குற்றவாளியாக இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே கணொளி தொடர்பாக, கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி காணொளியினால் பாதிக்கப்பட்ட பெண் காவலர்கள் பலர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்துள்ளனர்.


இதனை தொடர்ந்து, திருச்சி மாவட்ட கணினிசார் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோடிலிங்கம், தலைமையிலான காவல்துறையினர் நேற்று  காலை திருச்சி மாவட்ட கணினிசார் குற்ற எண். 21/24 U/s 294(b), 353, 509 IPC, 67 IT act and 4 of TN prohibition of harassment of women act 2 பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை சம்பிரதாய கைது (Formal arrest) செய்துள்ளனர். மேலும், இவ்வழக்கின் இரண்டாம் குற்றவாளியான பெலிக்ஸ் ஜெரால்டு என்பவர் மீது குற்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக சட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.