தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இரயில்களில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் வகையில், இரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர்  தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அதிகாலை அரியலூர் இரயில் நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் சோதனை மேற்கொள்ள ஆயத்தமானார்கள். அப்போது சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரயிலில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக இரயில்வே காவல்துறைக்கு  தகவல் கிடைத்தது. அதன்பேரில், அரியலூர் இரயில் நிலையம் வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி போதை பொருட்கள் தடுப்பு பிரிவு காவல்  சப்-இன்ஸ்பெக்டர் பிரேம், திருச்சி இரயில்வே காவல்  சப்-இன்ஸ்பெக்டர் திருமலைராஜா ஆகியோர்  தலைமையிலான குழுவினர் மற்றும் திருச்சி இரயில்வே பாதுகாப்பு படை  காவல்துறையினர்  இணைந்து ஒவ்வொரு பெட்டியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவில்லா பெட்டி ஒன்றில் பெண் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை கடத்தி செல்வது தெரியவந்தது.

 




மேலும் இரயில், திருச்சி அருகே ஸ்ரீரங்கம் இரயில் நிலையத்தை கடந்த நிலையில், இரயில் பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை இழுத்து காவல்துறையினர் திடீரென இரயிலை நிறுத்தினர். இடையில் இரயில் திடீரென நின்றதும் இரயில் பயணிகள் அச்சம் அடைந்தனர். அதே வேளையில் இரயில் நின்றதும், கஞ்சா பொட்டலங்களுடன் பயணித்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அயோத்திபட்டியை சேர்ந்த பால்ராஜ் மனைவி ராஜகொடி (வயது 53) என்ற பெண்ணை கைது செய்தனர். மேலும் அவர் கடத்தி வந்த 30 கிலோ கஞ்சா பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், அவர் சென்னையில் இருந்து ஆந்திராவை சேர்ந்த நபர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை வாங்கி கொண்டு மதுரைக்கு கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார். மேலும் ராஜகொடி, சென்னையில் கஞ்சா பொட்டலங்களை பெற்ற ஆந்திராவை சேர்ந்த நபர்கள் யார்? எனவும் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 



 

தமிழகத்தில் முழுமையாக கஞ்சா போன்ற போதைப்பொருட்களை ஒழிக்கவேண்டும் என காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இரயில் மூலம் கஞ்சா கடத்தல் அதிகரித்து வருவதால் இரயிவே பாதுக்காபடையினர் தொடர்ந்து அனைத்து இரயில் நிலைங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து கஞ்சா கடத்தலில் பெண் கைது செய்யபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற குற்றச்செயலில்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என இரயில்வே பாதுக்காப்பு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.