திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகாவில் உள்ள இக்கரை கோசுக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மலம்பட்டி, சீகம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பாலாறு உள்ளது. திருச்சி மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள இந்த பாலாற்றில் திண்டுக்கல் மாவட்டத்தின் மலைக்கேணி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழை நீர் கலக்கிறது. மேலும் மலம்பட்டி, சீகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், தங்கள் தேவைகளை நிறைவேற்றிட அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மங்களப்பட்டி பஸ் நிறுத்தத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும், அருகே உள்ள திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட என்.புதூர், சிரங்காட்டுப்பட்டி, கோசுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலும் சீகம்பட்டி- வலசுப்பட்டிக்கு இடையே உள்ள பாலாற்றை கடந்துதான் செல்ல வேண்டும். இந்த ஆற்றை கடக்காமல் செல்ல வேண்டும் என்றால் 10 முதல் 13 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டும். இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய அனைத்து தேவைகளுக்கும் இந்த ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலங்களில் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்லும்போது மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.




இதேபோல் பொதுமக்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட ஆற்றைக்கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும் இப்பகுதியில் பாலம் கட்டப்படும் என்று அரசியல் கட்சியினர் வாக்குறுதிகளை கொடுத்தாலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வேறு வழியின்றி ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ளதால் மாணவ-மாணவிகள் ஆற்றைக் கடக்கும்போது அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் அரணாக இருந்து அவர்களை மறுகரைக்கு அழைத்து செல்கிறார்கள்.




மேலும், புத்தகம் நனையாமல் இருக்க மாணவ-மாணவிகள் தங்கள் புத்தக பைகளை தூக்கி சுமந்து கொண்டு, உயிர் பயத்துடன் ஆற்றை கடந்து செல்வது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  எனவே இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சீகம்பட்டி- வலசுப்பட்டியை இணைக்கும் வகையில் பாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.