திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பாய்லர் ஆலை பகுதியில் மாடுகள், நாய்கள் தொல்லை அதிக அளவில் இருந்து வருகிறது. எனவே இவைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கும் படி பாய்லர் ஆலை அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கங்கத்தினர் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும் இதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாக்குடி ஊராட்சி பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). பாய்லர் ஆலையில் ஊழியராக பணியாற்றி வருகிறது. இவரது மகன் ஜெஸ்வந்த் (4). இவன் பாய்லர் ஆலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். நேற்று ஜெஸ்வந்த் பாய்லர் ஆலை குடியிருப்பு காமராஜபுரத்தில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, அங்கு நின்று இருந்த காளை மாடு ஜெஸ்வந்த்தை முட்டியது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் மாட்டை விரட்டி, பலத்த காயம் அடைந்த சிறுவனை மீட்டு பாய்லர் ஆலை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவன் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.




இதை அறிந்த தொழிற்சங்க அனைத்து நிர்வாகிகள் மற்றும் பாய்லர் ஆலை ஊழியர்கள் திரண்டு மாடு மற்றும் நாய்களை பிடிக்க கோரி பாய்லர் ஆலை நிர்வாகம் மற்றும் துவாக்குடி நகராட்சி கூத்தைப்பர் பேரூராட்சி நிர்வாகங்களை கண்டித்து திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ், துவாக்குடி நகராட்சி தலைவர் காயாம்பு, கூத்தைப்பார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், கூத்தைப்பார் செயல்அலுவலர் சுரேஷ்குமார், திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், பாய்லர் ஆலை மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் பலர் பேச்சுவார்்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால் மறியலை தொடர்ந்தனர்.




இதனை தொடர்ந்து துவாக்குடி நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து இன்னும் 2 நாட்களுக்குள் பாய்லர் ஆலை வளாகத்தில் உள்ள மாடுகள் மற்றும் நாய்களை முழுமையாக அப்புறப்படுத்துவோம் என்றும் உறுதி அளித்தனர். இது தொடர்பாக பாய்லர் ஆலை நிர்வாக மனித வள மேம்பாட்டு அதிகாரி மெல்வின் கூறும்போது, பாய்லர் ஆலை குடியிருப்பு வளாகம் மற்றும் ஆலைப் பகுதிகளில் உள்ள மாடுகள் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்படும். மேலும் ஆலைக்குள் மாடுகள் வராத அளவிற்கு அதற்கென தடுப்புகள் அமைக்கப்பட்டு பாய்லர் ஆலை ஊழியர்களின் குடும்பத்துக்கு முழுபாதுகாப்பு வழங்கப்படும் என்றார். மேலும் காயம் அடைந்த ஜெஸ்வந்த்துக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என பாய்லர் ஆலை தரப்பில் கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.