தமிழகத்தில் என்கவுண்டர் செய்ய உள்ளவர்கள் லிஸ்ட் தயார்...! எனக்கு எல்லா உயர் அதிகாரிகளையும் தெரியும் என கூறிய தேஜஸ் சுவாமிகள் மன்னிப்பு கேட்ட வீடியோ - சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.திருச்சி மாவட்டத்தில்  கடந்த மாதம்  சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள தேஜஸ் சுவாமிகள் என்கிற பாலசுப்ரமணியன்  காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும்  தனக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறுகிறார்.மேலும் தமிழகம் முழுவதும் 42 ரவுடிகள் encounter Hit list-ல்  உள்ளதாகவும் அதில் 12 பேர் டெல்டா  மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் உங்களுக்கு தெரிந்த  ரவுடியை பத்திரமாக இருக்குமாறும் எதிர்தரப்பில் பேசும் வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்குகிறார்.

Continues below advertisement


அதோடு மட்டுமன்றி தமிழக முதலமைச்சர் வீட்டிற்கு நேரில் சென்று வந்ததாகவும், அமைச்சர்கள் பலரும் என்னிடம்  ஜோசியம் கேட்பதற்காக வருவதாகவும் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார். பிரபல ரவுடிகளின் பெயர்களைக் கூறி பேசிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் பிரபல ரவுடி ஜெய் என்கிற கொட்டப்பட்டு ஜெய்குமார் தனக்கு எதிராக நீதிமன்றம் சென்று சாட்சி சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.




மேலும் ஜெய் தனக்கும் காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும்,எல்லா உயர் அதிகாரிகளையும் , அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியம் மற்றும் வழக்கறிஞர் கார்த்திக்கு தெரியும் என்றும் ஜெய் கூறி இருந்தார். மேலும் சாமியார் தன்னை என்கவுன்டர் லிஸ்டிலிருந்து தனது பெயரை நீக்குவதாகவும், வழக்குகளை முடித்து கொடுப்பதாகவும், தன்னை எதிர்த்து யாரும் சாட்சி சொல்லும்பட்சத்தில் அவர்களை கொலை செய்துவிடுவேன் எனவும் ஜெய் மிரட்டி வந்தார். இதற்கிடையே அல்லித்துறை தேஜஸ் சாமியார் என்கிற பாலசுப்பிரமணியம் மற்றும் வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் தொடர்பினை வைத்துக்கொண்டு அரசியல்துறை மற்றும் காவல்துறையினரிடம் செல்வாக்கு உள்ளதுபோல் உரையாடியது,கொலை மிரட்டல்கள் விடுத்ததாக பொன்மலை காவல்நிலைய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து 60 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி கொட்டப்பட்டு ஜெய், அவரது வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.




குறிப்பாக  தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட கொட்டப்பட்டு ஜெய் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அல்லித்துறை சாமியார் தான் இனிமேல் எந்த ரவுடிகளிடமும்,தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன் ,என்றும் மீண்டும் ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளப் போவதாக கூறி மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை அறிவித்துள்ளார் - இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் கடந்த மாதம் வெளிவந்த  ஆடியோவால் காவல்துறையினர்,அரசு மற்றும் பொது மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்பட்டிருந்தால் மன்னியுங்கள் என்று சாமியார் பாலசுப்ரமணியன் பேசி உள்ளார்.