திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் அரசுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் சிறுதானிய உணவுத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் தபிரதீப் குமார்  தொடங்கி வைத்தார்.


சிறுதானிய உணவுத் திருவிழா:


இதனைத்தொடர்ந்து சிறுதானிய உணவுப் பொருட்களின் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டாார். திருச்சி கலையரங்கத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டு-2023 கொண்டாடும் வகையிலும் பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து நுகர்வோர்களாகிய பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் உள்ளடக்கிய சிறுதானிய உணவுத்திருவிழா நடைபெற்றது. 




 


பரிசுத் தொகை:


இந்த சிறுதானிய உணவுக் கண்காட்சியில், கம்பு, கேழ்வரகு, சாமை, திணை, சோளம், குதிரைவாலி ஆகிய சிறுதானியங்களைப் பற்றி பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிறுதானியத்தை பயன்படுத்தும் நுகர்வோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் சர்வதேச சிறுதானிய ஆண்டு-2023 கொண்டாடும் வகையிலும் பள்ளி, கல்லூரி, அரசுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார்களால் சிறுதானிய அரங்குகளையும் அமைக்கப்பட்டிருந்தது.


சிறுதானியத் திருவிழாவில் சிறுதானியத்தால் தயாரிக்கப்பட்ட பல்வேறு உணவுப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. சிறப்பாக அரங்குகள் அமைத்த காவேரி பெண்கள் கல்லூரி, பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கண்ணுக்குளம் வட்டம், முசிறி ஆகிய அமைப்புகளுக்கு முறையே முதல், இரண்டாம், மூன்றாம் பரிசு தலா ரூ.5,000/-, ரூ.4,000/- மற்றும் ரூ.3,000/- ரொக்கப் பணம், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தினை மாவட்ட ஆட்சியர்  பிரதீப் குமார் வழங்கி பாராட்டினார்.




மேலும், அய்மான் கல்லூரி, ஜமால் முஹமது கல்லுாரி, பிஷப் கீபர் கல்லூரி மற்றும் மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக்க தொழில் நுட்பவியல் கல்லூரி, துவாக்குடி. ஆகிய கல்லூரிகளுக்கு சிறப்பு பரிசினையும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார்கள். முன்னதாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பெண்குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற வாசகம் அடங்கிய வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டு, செல்பி ஸ்டேன்டில் புகைப்படம் எடுத்துக்கொண்டும் மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 




இவனை தொடர்ந்து நமது பாரம்பரியமான சிறுதானிய உணவு வகைகளை இன்றைய கால தலைமுறையினர் மறந்து விட்டனர். ஆகையால் அவற்றின் நன்மைகளையும் ,உடல் ஆரோக்கியத்தையும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி நடைபெற்றது. மேலும் இது குறித்து விவசாயிகள் கூறுகையில்.. மனிதர்களின் உடலுக்கு ஆரோக்கியத்தையும் நலனையும் கொடுப்பது சிறுதானிய வகைகள் மட்டுமே.


ஆனால் இந்த காலத்தில் விதவிதமான உணவு வகைகள் வந்துள்ளது ,அதே சமயம் பலவிதமான நோய்களும் வந்து கொண்டிருக்கிறது. நமது முன்னோர்கள் காலத்தில் சிறு தானிய வகைகள் உணவுப் பொருட்களை முழுமையாக பயன்படுத்தியதால் தான் நீண்ட ஆயுளுடன் உடல் நலத்துடன் இருந்தனர். ஆகையால் ஆங்கில ஆங்கிலேயர்கள் கால உணவுகளை தூக்கி எறிந்து விட்டு, நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லனுக்கும் சரியான சிறு தானிய உணவை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.